|
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், அறிவினை நிச்சநிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல. (நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மறவியாகின்றது புகழைக்கொல்லும்: நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல.
இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நிச்சநிரப்பு அறிவினைக் கொன்ற ஆங்கு - நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல; பொச்சாப்பு புகழைக் கொல்லும் - மறதி ஒருவனது புகழைக் கெடுக்கும்.
நிச்சநிரப்பாவது நாள்தோறும் வருந்தி இரந்துண்ணும் நிலைமை. 'அன்ன மொடுங்கினால் அஞ்சு மொடுங்கும்'.ஆதலாலும்,
"நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்".
(குறள் . 1046)
ஆதலாலும், நிலையான வறுமை ஒருவனது அறிவைக் கெடுக்கும். அதுபோல் மறவியும் தற்காப்பின்மையாலும் கருமக்கேட்டாலும் அரசனது புகழை அழிக்கும் . வறுமையை நிரப்பென்பது மங்கல வழக்கான எதிர்மறைக் குறிப்பு .
|
|
கலைஞர் உரை:
|
|
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல
மறதி, புகழை அழித்து விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எப்படியெனில்) தொடர்ச்சியான தரித்திரம் ஒருவனுடைய அறிவைச் சிறுகச் சிறுக அழித்துவிடுவதைப் போல, தொடர்ச்சியான இன்பத்தில் கடமைகளை மறந்துவிடுவது ஒருவனுடைய புகழைச் சிறுகச் சிறுக அழித்துவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நாள்தோறும் வரும் வறுமையானது ஒருவனு டைய அறிவினைக் கொல்லுவதைப் போல, ஒருவனுடைய புகழினை மறதியானது கொன்றுவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வாழ்வில் தொடர்ந்து ஏற்படும் வறுமை ஒருவனது அறிவைக் கெடுக்கும் அதுபோல மறதிப்பண்பானது அவனுக்கேற்படும் புகழை இல்லாததாக்கும்.
|
|
Translation
|
|
Perpetual, poverty is death to wisdom of the wise;
When man forgets himself his glory dies!.
|
|
Explanation
|
|
Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.
|
|
Transliteration
|
|
Pochchaappuk Kollum Pukazhai Arivinai
Nichcha Nirappuk Kon Raangu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|