|
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. (மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு.
தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சிறந்த உவகை மகிழ்ச்சியில் சோர்வு - மிகுந்த இன்பக்களிப்பால் வரும் மறதி ; இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அள விறந்த எரிசினத்திலும் தீயதாம்.
சிறந்தவுவகை பெருஞ்செல்வம் , இடைவிடா இன்ப நுகர்ச்சி, பெரும்புகழ் முதலியவற்றால் நேர்வது . அளவான வெகுளி பகைவரை யொடுக்குதற்கும் கொடியோரைத் தண்டித்தற்கும் வேண்டுவதாம். அளவிறந்த வெகுளி ஒருகால் கடும்பகைவரைக் கொல்ல உதவலாம். ஆயின், வினைச் சோர்வு தன்னையே கொல்லுதலால் அதனினுந் தீயதாயிற்று.
|
|
கலைஞர் உரை:
|
|
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும்
விளைவை விடத் தீமையானது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(நல்ல நிலைமையில் இருக்கும்போது யாரும் தம்முடைய கடமைகளை மறந்துவிடுவது வழக்கம். அதனால்) குற்றமற்ற இன்பங்களேயானாலும் அவற்றை அனுபவிக்கிற மகிழ்ச்சியினால் கடமைகளை மறந்துவிடுவது அளவு கடந்த கோபத்தினால் உண்டாகும் தீமைகளை விட அதிகத் தீமையை உண்டாக்கிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மிகுந்த உவகைக் களிப்பினால் வருகின்ற மறதியானது, அரசனுக்கு அளவு கடந்த கோபத்தினை விடவும் தீமையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சிறந்த உவகையினால் மகிழ்ச்சியடையும் போது அதனால் ஏற்படுகின்ற மறதியானது ஒருவனுக்கு அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் தீங்கானது ஆகும்.
|
|
Translation
|
|
'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul
Bring self-forgetfulness than if transcendent wrath control.
|
|
Explanation
|
|
More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.
|
|
Transliteration
|
|
Irandha Vekuliyin Theedhe Sirandha
Uvakai Makizhchchiyir Sorvu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|