|
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக. (கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல் . விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவனென்று ஆராய்ந்து பின்பு அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக.
இது பெரும்பான்மையுஞ் சேனாதிபதியை நோக்கிக் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ்வினையை இக்கருவிகொண்டு இவ்வாற்றலுள்ள இவன் செய்து முடிப்பான் என்று கூறுபடுத்தி யாராய்ந்து ; அதனை அவன் கண் விடல் - மூன்றும் பொருந்திய விடத்து அவ்வினையை அக்கருவியும் அவ்வாற்றலு முள்ள அவனிடம் ஒப்படைக்க.
கருவியாவன: முதற்கருவி, துணைக்கருவி, பொருள், துணைவர் முதலியன. மூன்றும் பொருந்துதலாவது, வினைசெய்வானொடு வினைக்குரிய ஆற்றலும் கருவியும் சேர்தல், 'அவன்கண் விடல்' அவனை வினைக்குரியவனாக்குதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை
ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம்
ஒப்படைக்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(சில காரணங்களினால் சில வேலைகளைக் குறிப்பிட்ட வசதியுள்ள சில பேர்தாம் செய்ய முடியும். அதனால்) இந்தக் காரியத்தை இன்னின்ன காரணத்தால் இவன்தான் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்தறிந்து அந்தக் காரியத்தை அவனிடம் விடவேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இத்தொழிலினை இக்கருவியினால் இவன் முடிக்க வல்லவன் என்று வகைப்படுத்தி ஆராய்ந்து, அவை யனைத்தும் ஒத்திருந்தால் அத்தொழிலினை அவனிடம் விடுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இந்தச் செயலை இந்த உபாயத்தால் இவன் திறம்படச் செய்து முடிப்பான் என்று ஆய்ந்து தேர்ந்த பின்னரே அந்தப் செயலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
|
|
Translation
|
|
'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand.
|
|
Explanation
|
|
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.
|
|
Transliteration
|
|
Ithanai Ithanaal Ivanmutikkum Endraaindhu
Adhanai Avankan Vital
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|