|
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே,பிறிதில்லை. (இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும்,முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம்.
இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - மக்கள் அறிவாற்றல் குணங் கல்வி பொருள் ஆகியவற்றால் அடையும் மேன்மைக்கும் மற்றக் கீழ்மைக்கும் உரைகல்லாயிருப்பது ; தம்தம் கருமமே - அவரவர் செய்யும் வினையே யன்றி வேறொன்று மன்று.
கையூட்டினாலும் இனவுணர்ச்சியினாலும் கண்ணோட்டத்தாலும் கவர்வினாலும் சிலர் மேன்மையடையினும் , உண்மையான உயர்விற்கு ஏதுவாயிருப்பது வினைமுயற்சியே என்பது ஆசிரியர் கருத்து . ஆகவே , வினைத்திறமையுள்ளவனையே வினைக்கமர்த்துக என்பதாம் . "பெருமையுஞ் சிறுமையுந் தான்றர வருமே," என்னும் அதி வீரராம பாண்டியன் கூற்று இக்குறட் சுருக்கமாகும். கருமத்தைக் கட்டளைக் கல்லாக உருவகித்துப் பெருமை சிறுமைகளை மாழை (உலோக) வகைகளாக உருவகியாது விட்டது ஒருமருங்குருவகம் . ஏகாரம் தேற்றம் , ஒருவனுக்கு அறிவாற்றல் மிக்கிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் வினைத்திறமின்றேல் அவற்றாற் பயனில்லை யென்பதாம் . பரிமேலழகர் பெருமை சிறுமைக்குக் கரணியமாகப் பிறப்பையுங் குறித்துள்ளார்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர்
தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒருவனுடைய குணத்தை அவனுடைய செயல்களால் கண்டுகொள்ளலாம்.) நல்ல குணமுடையவன் என்ற பெருமைக்கும் கெட்ட குணமுடையவன் என்ற சிறுமைக்கும் அவனவனுடைய செயல்களே மாற்றறியும் உரை கல்லாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுடைய பெருமைக்கும் மற்றைய சிறுமைக்கும் உரைகல்லாக இருப்பது அவனவன் செய்கின்ற செயல்களேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவருடைய பெருமைக்கும், மற்று சிறுமைக்கும் அவரவர் செயல்பாடுகளே உரைகல்லாக அமையும்.
|
|
Translation
|
|
Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true.
|
|
Explanation
|
|
A man's deeds are the touchstone of his greatness and littleness.
|
|
Transliteration
|
|
Perumaikkum Enaich Chirumaikkum Thaththam
Karumame Kattalaik Kal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|