Thirukural

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து, குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து, மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக. (மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமேயுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்.
தேவநேயப் பாவாணர் உரை:
குணம் நாடி - குணமுங் குற்றமு மாகிய இரண்டு முடையாரே உலகத்திலிருத்தலால் , ஒருவன் குணங்களை முதலில் ஆராய்ந்து ; குற்றமும் நாடி - அதன்பின் அவன் குற்றங்களையும் ஆராய்ந்து ; அவற்றுள் மிகை நாடி - அவ்விரு பகுதிகளுள்ளும் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து ; மிக்க கொளல் - மிகுந்ததை அளவையாகக் கொண்டு அவன் தகுதியுண்மை யின்மையைத் துணிக. ஒருவனுடைய குற்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்டனவாகவும் விளங்கித் தோன்றுவனவாகவு மிருந்து , அவனை எங்ஙனந் தெளிவதென்று மயக்கம் நேரின் , அம்மயக்கத்தைத் தெளிவிப்பது இக்குறள் . குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து , குணம் மிகின் வினைக் குரியவனென்றும் , குற்றம் மிகின் அல்லனென்றும் , தீர்மானிக்க என்றார், மிகையுடையது மிகையெனப்பட்டது . மிகை பன்மை பற்றி அல்லது தலைமை பற்றித் தீர்மானிக்கப்படுவது.
கலைஞர் உரை:
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(குற்றமே இல்லாதவர்களாகப் பார்த்துத்தான் நம்ப வேண்டுமென்பது முடியாத காரியம். யாரிடத்திலும் குற்றமும் உண்டு. குணமும் உண்டு. அதனால்) ஒருவனுடைய நல்ல குணத்தையும் ஆராய்ந்து அவனுடைய கெட்ட குணத்தையும் ஆராய்ந்து எது அதிகமோ அதைக்கொண்டு தீர்மானிக்கவேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுடைய குணங்களையும் ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து அந்த இரண்டு வகைகளிலும் மிக்கவற்றை ஆராய்ந்து, அந்த மிக்கவற்றைக் கொண்டு அவனை அறிந்து கொள்ளல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
ஒருவருடைய குணநலன்களை ஆய்ந்து, அவர்தம் குற்றங்களையும் தெரிந்து, அவற்றுள் மிகையானவை எவை எனத் தேர்ந்து மதிப்பிடல் வேண்டும்.
Translation
Weigh well the good of each, his failings closely scan, As these or those prevail, so estimate the man.
Explanation
Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.
Transliteration
Kunamnaatik Kutramum Naati Avatrul Mikainaati Mikka Kolal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 504