|
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உறுபடையான் - பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும். ('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும்' என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும்.
இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சிறு படையான் செல் இடம் சேரின் - சிறுபடையான் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் சென்று சேரின் ; உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் - அவனை வெல்லக் கருதிச் சென்ற பெரும்படையரசன் அவனை வெல்லும் வழியின்மையால் தன் ஊக்கங் கெட்டு வினையொழிந்து திரும்புவான் .
விடுதல் விட்டு நீங்குதல் , வினைக்கு இடமின்மையால் விடும் என்றார் . இது , உடும்பு முயல் முதலியவற்றைத் துரத்திச் சென்ற நாய் , அவை வளைக்குள் நுழைந்தபின் திரும்பி வருவது போன்றது . சிறுபடையான் புகுந்த இடத்திற்குச் செல்லும் வழி பெரும்படை செல்ல முடியாவாறு மிக ஒடுங்கியிருக்குமாதலாலும் , ஒவ்வொருவராகவோ சிற்சிலராகவோ செல்லத்துணியின் மேலிருந்தோ ஒரு கோடியில் நின்றோ சிறுபடை பெரும்படை முழுவதையும் வெட்டி வீழ்த்திவிடுமாதலாலும் , மலைவழியும் மரமடர்ந்த காட்டுவழியுமாயின் பெரும்படை வழிதெரியாது மயங்கி இடர்ப்பட நேருமாதலாலும் , 'ஊக்க மழிந்து விடும்' என்றார் . 1841 - ஆம் ஆண்டு நிகழ்ந்த முதலாம் ஆபுகானியப் போரில் , இந்தியப்படை முழுவதும் கைபர்க்கணவாயிற் சுட்டுக் கொல்லப்பட்டது இங்கு நினைக்கத்தக்கது . 'உறு' உரிச்சொல் .
|
|
கலைஞர் உரை:
|
|
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால்
பெரிய படையை வென்று விட முடியும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டால்) குறைந்த பரிவாரமுள்ளவனானாலும் ஒருவன் தகுந்த இடத்தில் மட்டும் இருந்துகொண்டால், மிகுந்த பரிவாரங்கள் உள்ளவன் அவனை வெல்ல நினைக்கும் முயற்சிகள் பலிக்கமாட்டா.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பெரும் படையினையுடைய அரசர் சிறுபடை யுடையவனை வெல்லக்கருதி அவன் இருக்கும் இடத்தினைச் செருவானானால், அப்பகையால் தனது பெருமை அழிவான்
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பெரும்படையை உடைய மன்னவனாயினும் சிறிய படையே உடைய ஒருவன் இடத்திற்குச் சென்று போரிடத் துணிந்தால், அவன் திறன் குன்றிப் போகும்.
|
|
Translation
|
|
If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.
|
|
Explanation
|
|
The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.
|
|
Transliteration
|
|
Sirupataiyaan Sellitam Serin Urupataiyaan
Ookkam Azhindhu Vitum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|