|
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும், மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது. ('நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண்சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர். ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அரசன் பதியும் பெருமையும் இலராயினும் மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது.
இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சிறைநலனும் சீரும் இலர் எனினும் - அழித்தற் கரிய அரண்சிறப்பும் பெரும்படையும் பெரும்பொருளுமாகிய பிற பெருமையும் இல்லாதவராயினும் ; மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது - போர் வினைக்குச் சிறந்த மாந்தரை அவர் நிலையாக வதியும் இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிதாம் .
ஒட்டல் பொருந்துதல் ; இங்குப் பொருந்திப் பொருதல் . ஆதலால் , பரிமேலழகர் குறித்தவாறு வேற்றுமை மயக்கம் அன்றாம் . அரிமாவும் வரிமாவும்போற் பொரும் ஆண்மை யுடையாரை தொகைச் சிறுமை நோக்கி யிகழ்ந்து அவரிருப்பிடஞ் சென்று தாக்கின் , அவர் மறமிகுதியானும் வேறிடமின்மையானும் உயிரைப் பொருட்படுத்தாது ஊன்றிப்பொருவர் . அதனாற் பெரும்படையும் அவர்க்கு உடையும் என்பதாம் . "ஊக்கம் ஒன்பது ஆளை அடிக்கும்" என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
|
|
கலைஞர் உரை:
|
|
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும்
இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப்
படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பாதுகாப்பான இட வசதி இல்லை என்பதற்காக இருக்கிற இடத்தையும் விட்டுவிடக்கூடாது.) பாதுகாப்பு வசதியும் மற்றச் சிறப்புக்களும் இல்லாவிட்டாலும் மக்கள் அவரவர்களுடைய உறைவிடத்தை விட்டுவிடாமல் இருப்பது அருமையான காரியம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அரண் அழித்தற்கு அருமையினையும் பெருமை யினையும் ஆகிய ஆற்றவினையும் இல்லாதவராக இருந் தாலும் தொழிலுக்கு உரிய மாந்தரை அவர்கள் இருக்கின்ற இடத்திற்குச் சென்று தாக்குதல் அரிதான தாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் தன் இடத்தில் நிலைத்திருக்கின்ற பொழுதுபெரும் அரணும், படைமுதலாகிய பாதுகாப்பும் இல்லை எனினும் பிறர் அவரை வெற்றி கொள்வது அரிது.
|
|
Translation
|
|
Though fort be none, and store of wealth they lack,
'Tis hard a people's homesteads to attack!.
|
|
Explanation
|
|
It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.
|
|
Transliteration
|
|
Sirainalanum Seerum Ilareninum Maandhar
Urainilaththotu Ottal Aridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|