|
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க, மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க -மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க. (மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும்துணையும் முன்அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லதுபோன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பேவிரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்குஉவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் குத்து ஒக்க என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம் .ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும்இலக்கணம் கூறியவாறாயிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல்
விரைந்து செய்க.
இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்யவேண்டுமென்பதூஉம் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேல் செல்லாதிருக்குங் காலத்து மீன்தேடுங் கொக்குப்போல் ஒடுங்கியிருக்க ; மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க - மற்றுச் செல்லுங்காலம் வாய்த்த விடத்து அக்கொக்கு விரைந்து மீனைக்கொத்துவதுபோல் விரைந்து பகைவனைத் தாக்குக .
கூம்புதல் குவிதல் . குவிதல் ஒடுங்குதல் . மலரின் ஒடுக்கம் அரசரின் வினையொடுக்கத்திற்கு உவம மாயிற்று . 'ஓடுமீனோடியுறு மீன் வருமளவும் - வாடியிருக்குமாங் கொக்கு' ( மூதுரை , 16) தனக் கேற்ற மீன்வரும்வரை அது முன்னறிந்து தப்பாமைப் பொருட்டுத் தவஞ்செய்வான் போல் அசைவற்று நிற்றலும் , அது வந்தவுடனே திடுமென்று கொத்துதலும் , அரசன் காலம் வரும்வரை பகைவர் ஐயுறாவாறு அமைந்திருத்தற்கும் அது வந்தவுடன் விரைந்து வினைமுடித்தற்கும் . சிறந்த வுவமமாயின . இதனால் இருப்பு வினைகளின் இயல்பும் விளக்க மாயின
|
|
கலைஞர் உரை:
|
|
காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக்
காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி
தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(காலத்துக்காகக் காத்திருப்பதும் வாய்ப்பு நேர்ந்தால் உடனே செய்வதும் எப்படி யிருக்கவேண்டுமென்றால்) ஒரு கொக்கு தன் இரைக்காகக் காலங்கருதி சிறிதும் அசைவில்லாமல் வாடி யிருப்பதுபோல் இருக்கவேண்டும். வாய்ப்பு வந்தவுடன் அந்தக் கொக்கு நறுக்கென்று மீனைக் கொத்திக்கொள்வதைப் போல் காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தொழில்மேல் செல்லாதிருக்கும் காலத்தில் கொக்கு இருப்பது போல அமைதியாக இருத்தல் வேண்டும். மற்றபடி, தொழில் மேல் செல்லும் காலம் வந்து வாய்த்த போது, அக்கொக்கினைப் போலத் (குத்துவதைப் போல) தப்பாமல் செய்து முடித்துக் கொள்ளுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கொக்கினைப் போல் அமைதியாகக் காத்திருந்து உரிய நேரத்தில் அது மீனைக் கொத்திப்பற்றுதல் போல் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும்.
|
|
Translation
|
|
As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.
|
|
Explanation
|
|
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.
|
|
Transliteration
|
|
Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|