|
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக்கருதும் அரசர்,தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால், அந் நிலையே செய்தற்கு அரிய செயல் - அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற்செய்தற்கு அரிய வினைகளைச் செய்க. (ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும் அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க.
இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகைவரை வெல்லக் கருதும் அரசன் தனக்கு வாய்த்தற்கரிய சமையம் வந்து சேரின் ; அந்நிலையே - அப்போதே ; செய்தற்கு அரிய செயல் - அது வரை செய்தற்கு அரிதாயிருந்த வினைகளைச் செய்துவிடுக .
தானாக நேர்ந்தாலொழிய எவ்வகையாலும் பெறப்படாமையின் , 'எய்தற்கரியது' என்றும் , அதுநேர்வது அரிதாகலின் 'இயைந்தக்கால் 'என்றும் , அது நீடித்து நில்லாமையின் 'அந்நிலையே' என்றும் , அது நேராதவிடத்துச் செய்தற் கியலாமையின் 'செய்தற்கரிய' என்றும் , கூறினார் . ஏகாரம் பிரிநிலை .
|
|
கலைஞர் உரை:
|
|
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப்
பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(காலங் கருதிக் காத்திருக்கும்போது, தான் குறித்துள்ள காலத்துக்கு முன்னால் எதிர்பாராதபடி இதைவிட அருமையான வாய்ப்புக் கிடைக்காதென்ற சமயம் கிடைத்துவிட்டால் பின்னால் அப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைக்காதென்பதற்காக அப்போதே குறித்த காரியத்தைச் செய்துவிட வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகைவரை வெல்லுவதற்குப் பெறுதற்கரிய காலம் வந்து கூடியபோது, அக்காலம் கழிவதற்கு முன்பே செய்தற்கு அரிய தொழில்களைச் செய்து கொள்ளுவார் களாக.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கிடைப்பதற்கு அரிதான வாய்ப்பு அமையுங்கால், அதனை அப்போதே பயன்படுத்திக் கொண்டு அரிதான செயல்களையும் செய்து முடிக்க வேண்டும்.
|
|
Translation
|
|
When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.
|
|
Explanation
|
|
If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).
|
|
Transliteration
|
|
Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye
Seydhar Kariya Seyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|