Thirukural

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்.

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி, பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும். (முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும், இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரொடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும், செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் புரைபடும். இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆற்றின் வருந்தா வருத்தம் - தக்க வழியாற் கருமத்தை முயலாத முயற்சி ; பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - பின்பு பலர் துணை நின்று கருமங்கெடாமற் காப்பினும் கெட்டுப் போகும் . தக்கவழியால் முயலுவதாவது , இன்சொல்லை . நேர்மையாளன் , ஆண்மையில்லாதவன் , முதுகிழவன் , உலகவுவர்ப்புற்றோன் முதலியோரிடத்தும் பொருட்கொடையைப் பொருளாசைக்காரனிடத்தும் , மகட்கொடையைக் காமுகனிடத்தும் , பிரிப்பைத்தன்னொடு பொருந்தாதவனிடத்தும் ; தண்டித்தலைக் கயவனான எளியவனிடத்தும் , பயன் படுத்துதல் . பொத்துப்படுதல் துளைவிழுதல் அல்லது ஓட்டையாதல் . அது இங்கு அணிவகைப்பொருளிற் கருமக்கேட்டைக் குறித்தது . வருந்திச் செய்யும் முயற்சி வருத்தம் எனப்பட்டது தொழிலாகுபெயர் . இனி , வலிய படைக்கலங்களும் தகுந்த தலைவனும் நல் வானிலையும் (Weather) நிலநலமும் உணவு நிறைவும் ; அவ்வப்போது இடமும் வினையும் மாறும் பயிற்சியும் போர்விலக்காரமும் இன்றிக் குருட்டுத்தனமாக மிகப் பாடுபட்டுப் போர்செய்யும் படை எவ்வளவு பெரிதாயினும் , வெற்றியின்றி மடியும் என்றுமாம் .
கலைஞர் உரை:
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய் விடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஏன் எனில்) காரியத்தைப்பற்றியும் அதை முடிக்கும் வழிகளைப்பற்றியும் வருந்தியாவது ஆராய்ந்துகொள்ள வேண்டும். இல்லையானால், பின்னால் வரக்கூடிய வருத்தங்களைப் பலபேர் கூடித்துணைநின்று தடுத்தாலும் தவிர்க்க முடியாமல் காரியம் கெட்டுப்போகும்;
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
செய்து முடிக்க வேண்டிய வழியினால் தொழிலினை முயலாத முயற்சி, துணையாகப் பலர் இருந்து குற்றம் வராமல் காப்பாற்றினாலும் குற்றம் உடையதாகவே முடியும்.
தமிழ்க்குழவி உரை:
உரிய முறைகளில் முயன்று முயற்சியுடன் வருந்தி உழைத்திடாத ஒரு செயல் பலர் சூழ்ந்து நின்று புகழ்ந்து பேசினும் குறைபட்டு முற்றுப் பெறாது.
Translation
On no right system if man toil and strive, Though many men assist, no work can thrive.
Explanation
The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.
Transliteration
Aatrin Varundhaa Varuththam Palarnindru Potrinum Poththup Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 468