|
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக, துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான். (துணிவுபற்றி நிகழ்தலின் துணிவு எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது , கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத , தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய. ஏனைய மூவகைய, அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால்விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல்ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு'என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குகஎன்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவினை செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிக: துணிந்தபின் எண்ணுவோமென்றல் தப்பாமாதலான்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க வினையையும் வெற்றியாக முடிக்கும் வழிவகைகளை ஆராய்ந்து தொடங்குக ; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கியபின் எண்ணுவோ மென்று கடத்திவைப்பது குற்றமாம் .
துணிதல் தீர்மானித்துத் தொடங்குதல் . அரசர்க்குரிய தொழில்கள் ஆறு . அவையாவன : -
"ஓதல் பொருதல் உலகு புரத்தல்
ஈதல் வேட்டல் படைபயிறல் அறுதொழில்"
(பிங் . 5 : 42)
"ஓதலே வேட்ட லீத லுலகோம்பல் படைப யிற்றல்
மேதகு போர்செய் தீட்டல் வேந்தர்செய் தொழில்க ளாறே".
(சூடா. 12 : 52)
இவற்றுள் வேட்டல் என்பது வேட்டையாடல் . பிற்காலத்தில் ஆரியர் இதற்கு வேள்வி செய்தல் என்று பொருள் கூறிவிட்டனர் . அரசர் தொழில் ஆறாயிருக்கவும் , "ஐவகை மரபின் அரசர் பக்கமும்" (புறத். 20) என்று தொல்காப்பியங் கூறுவது ஆராயத்தக்கது . அறுதொழில்களுள் எதைத் தொல்காப்பியர் நீக்கினார் என்பது திட்டமாய்த் தெரியவில்லை. ஆயின் , இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும் அரசர்க்குச் சிறப்பாகவுரிய போர்த்தொழிலை நீக்கி உரை வரைந்துள்ளனர் . "நுண்ணிய கருமமும் எண்ணித்துணி" என்று ஒளவையார் கூறியதுபோல் , எல்லாவினைகளையும் எண்ணியே செய்யவேண்டுமாயினும் , மிகுதியாக எண்ணுவதை வேண்டுவது போர்வினையே . அதனால் வாழ்வுஞ்சாவும் நேர்தலின் , இயன்றவரை அதனைவிலக்கி இன்றியமையாத விடத்தே அதை மேற்கொள்ளுமாறு நால்வகை ஆம்புடைகள் வகுக்கப் பட்டுள்ளன . வலிய பகைவன் தாக்கவரின் கொடை அல்லது திறையாலும் ; ஒத்த பகைவன் வரின் இன்சொல் , பிரிப்பு , கொடை என்னும் மூன்றனுள் ஒன்றாலும் போரைவிலக்கி , எளிய பகைவனாயின் போரால் ஒறுத்தல் வேண்டுமென்பது , பொதுவான கருத்து . துணைவலி சேர்வதால் எளியவன் வலியவனாவதும் , அது தீர்வதால் வலியவன் எளியனாவதும் , இயல்பு பகைவர் பலராயின் பிரிப்பு ஒன்றே கையாளத்தக்க சிறந்தவழியாம் . வலிய பகைவனையும் ஒத்த பகைவனையும் மகட்கொடையாலும் நட்பாக்கலாம்.இவையெல்லாவற்றையும் போர் தொடங்கு முன்னரே எண்ணவேண்டுமென்பதும் , தொடங்கியபின் எண்ணுவது குதிரைகளவுபோனபின் கொட்டகையைப் பூட்டுவதும் வாசல் நிலையில் முட்டிவிட்டு வணங்கிக் குனிவதும் போன்ற குற்றமாகு மென்றும் , இங்குக் கூறப்பட்டன . 'கருமம்' தென்சொல்லே , இதன் விளக்கத்தைப் பின்னிணைப்பிற் காண்க .
|
|
கலைஞர் உரை:
|
|
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு
சிந்திக்கலாம் என்பது தவறு.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) தீர ஆராய்ந்து அறிந்துகொண்ட பின்புதான் காரியத்தை ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பித்துவிட்டு நடக்க நடக்க ஆராய்ந்துகொள்ளலாம் என்பது குற்றம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தொழிலினை, முடிக்கும் திறத்தினை நன்கு எண்ணிப் பார்த்துத் தொடங்குதல் வேண்டும். தொழிலினைத் தொடங்கிய பிறகு முடிக்கும் திறத்தினை எண்ணுவோம் என்பது குற்றமேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நன்றாக ஆலோசித்த பின்னரே ஒரு காரியத்தைச் செய்யத் துணிதல் வேண்டும். துணிந்த பின் ஆய்ந்து குழப்பிக் கொள்ளுதல் இழப்பைத் தரும்.
|
|
Translation
|
|
Think, and then dare the deed! Who cry,
'Deed dared, we'll think,' disgraced shall be.
|
|
Explanation
|
|
Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.
|
|
Transliteration
|
|
Ennith Thunika Karumam Thunindhapin
Ennuvam Enpadhu Izhukku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|