|
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும். ('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கொடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும்.
இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் -குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும்- தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்.
'இல்லாத ஏமரா ' என்னும் பெயரெச்ச வடுக்கு கரணிய (காரண) கருமிய (காரிய)ப் பொருளது. ஏ+மரு(வு)=ஏமரு. ஏமருதல் காப்புறுதல். உம்மை எதிர்மறை குறித்த வைத்துக்கொள்வுப் பொருளது. தானே கெடுதல் , ஓட்டுநன் இல்லாத வண்டியிழுக்குங் காளை நெறியல்லா நெறிச்சென்று பள்ளத்தில் விழுந்து கெடுவது போன்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படி) இடித்துக் கூறும் பெரியவர்கள் துணைவராக இல்லாத அரசன் பாதுகாப்பற்றவன். அவனைக் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானாகவே கெட்டுப் போவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இடித்துக்கூறி நல்வழிப்படுத்தும் அறிஞர்கள் துணையாக இல்லாத மன்னன், கெடுப்பார் இல்லாயினும் தானே கெட்டொழியும் நாள்வரும்.
|
|
Translation
|
|
The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall.
|
|
Explanation
|
|
The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.
|
|
Transliteration
|
|
Itippaarai Illaadha Emaraa Mannan
Ketuppaa Rilaanung Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|