|
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்? (தீயன: பாவங்களும் நீதியல்லனவும் துணையாம் தன்மையாவது , தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம் . 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர்.
இது கேடில்லை யென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இடிக்கும் துணையாரை ஆள்வாரை - குற்றங்கண்ட விடத்து வன்மையாய்க் கடிந்து கூறும் உண்மைத்துணையாளரைத் தமக்குச் சிறந்தவராகக் கொண்டொழுகும் அரசரை; கெடுக்குந் தகைமையவர் யாரே - கெடுக்குந் திறமையுடைய பகைவர் உலகத்தில் யார் தான் ?
குற்றங்கள் அறங்கடையும் (பாவமும்) அரசநேர்பாடு (நீதி) அல்லனவும். உண்மைத்துணையாவது அக்குற்ற மின்மையும் அரசன் கண் அன்புடைமையும். அத்தகையார் அரசு நெறியினின்று நீங்க விடாமையின். அவரைத்துணைக் கொண்டவர் ஒருவராலுங் கெடுக்கப்படார் என்பதாம். இடிக்குந்துணையார் என்பதற்கு நெருங்கிச் சொல்லுமளவினோர் என்று உரைக்கும் உரை சிறந்ததன்று.
|
|
கலைஞர் உரை:
|
|
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று
நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏன் என்றால் அப்போதைக்கப்போது) இடித்துக் கூறி அறிவு சொல்லும் பெரியவர்களைத் துணைவர்களாகக் கொண்டு குற்றமில்லாமல் நடந்துகொள்ளுகிறவர்களுக்குக் கெடுதி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் தன்மையுடைய பெரியார்களை, இவர்கள் தமக்குச் சிறந்தார் என்று கொள்ளுபவர்களைக் கெடுக்கும் பெருமையுடைய பகைவர் யாவர் உளர்?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
குற்றம் கண்டவிடத்து இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் அறிஞர்களைப் பக்கப் பலமாகக் கொண்டொழுகுபவர் களை யார் பொருது வெல்லமுடியும்?
|
|
Translation
|
|
What power can work his fall, who faithful ministers
Employs, that thunder out reproaches when he errs.
|
|
Explanation
|
|
Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?.
|
|
Transliteration
|
|
Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare
Ketukkun Thakaimai Yavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|