Thirukural

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார். (முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார், அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர். இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய வல்லவர்; அறிவிலார் அஃது அறிகல்லாதவர் -அறிவில்லாதவர் அதனை முன்னறியும் ஆற்றலில்லாதவர். முன்னறிதல் எண்ணியறிதலும் எண்ணாதறிதலும் என இருவகை. எண்ணியறிதல் பொதுவகைப்பட்ட அறிஞர் செயல்; எண்ணா தறிதல் இறைவனால் முற்காணியர்க்கு (Prophets) அளிக்கப் பட்ட ஈவு. "பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார்" என்று மணக் குடவபரிப்பெருமாளரும் , "அறிவுடையவர் ஆகும் காரியம் அறிவார்". என்று பரிதியாரும், "உலகத்து அறிவுடையோர் ----------- தமக்கு இருமை ஆக்கமும் ஆவதனை அறிந்து ஒழுகுவாரே." என்று காளிங்கரும், உரைப்பர். தமக்கு நன்மையாவதை அறிவது தன்னல வியல்பேயன்றி அறிவுடைமையாகாது.
கலைஞர் உரை:
ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மேலும்) அறிவுடையவர்கள் எதனால் எது வரும் என்று, பின்னால் வரக்கூடியதை முன்னால் ஆலோசித்தறிந்து எச்சரிக்கை கொள்வார்கள். அப்படி முன் யோசனை செய்யத் தெரியாதவர்கள் அறிவில்லாதவர்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அறிவுடையார் பின்னர் வருவதை அறிய வல்லவராவர், அறிவில்லாதவர்கள் அவ்வாறு பின்னர் வர இருப்பதனை முன்னே அறிந்துகாள்ள முடியாதவர்கள் ஆவார்கள்.
தமிழ்க்குழவி உரை:
அறிவுடையார் நாளை நடக்க விருப்பதை இன்றே அறிவர். அறிவிலாதார் அத்தகையத்திறன் இல்லாதவரே.
Translation
The wise discern, the foolish fail to see, And minds prepare for things about to be.
Explanation
The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.
Transliteration
Arivutaiyaar Aava Tharivaar Arivilaar Aqdhari Kallaa Thavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 427