Thirukural

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்.

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.
தேவநேயப் பாவாணர் உரை:
ஊழின் பெருவலி யா உள - ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை வேறு எவையிருக்கின்றன ? ; மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - அதை விலக்குதற்கு வேறொரு வழியை ஆய்ந்து எண்ணினும், அவ்வழியையே தனக்கும் வழியாகக்கொண்டு அது அவ்வெண்ணத்தின் முற்பட்டு வந்து நிற்கும். உறுவலி, மதவலி என்பனபோலப் பெருவலி என்பது ஆகுபெயர். சூழினும் என்பது எச்சவும்மை. 'சூழினுந்தான் முந்துறும்' என்றமையால், சூழ்ச்சியை நிறைவேற்றுதல் ஒருகாலுங் கூடா தென்பதாம். சூழ்தலாவது நாற்புறமும் வளைந்து முற்றுகையிடுதல்போலப் பகைவர் ஒருவழியாலும் தப்பமுடியாவாறு தீரஎண்ணுதல். இங்குப் பகை ஊழ்.
கலைஞர் உரை:
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?
சாலமன் பாப்பையா உரை:
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பழவினையைவிட வல்லமையுள்ளது என்ன இருக்கிறது? அதை விலக்கிவிட என்ன உபாயங்களைச் செய்தாலும் அதுதான் முன்னால் வந்து நிற்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தன்னை விலக்குதற்பொருட்டு வேறாகிய வழியினை முயன்றாலும், தான் பிறிதோர் வழியாகவாவது அந்த முயற்சிக்கு முந்தி நிற்கும். அதனால் ஊழினைப்போல மிக்க வலிமையுடையன யாவை உள?.
தமிழ்க்குழவி உரை:
ஊழ்வினையை விட வலிமை பொருந்தியது வேறெதுவும் இல்லை. ஒருவர் ஆய்ந்து தேர்ந்து அதனின்னு விடுபட எவ்வளவு முயன்றாலும், அதுவே முன்வந்து நிற்கும்.
Translation
What powers so great as those of Destiny? Man's skill Some other thing contrives; but fate's beforehand still.
Explanation
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).
Transliteration
Oozhir Peruvali Yaavula Matrondru Soozhinun Thaanmun Thurum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 380