|
நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார், அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி? (தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?
இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நன்று ஆம்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினைப் பயன்களாகிய இன்பங்கள் நேருங்கால் அவற்றை நல்லவை யென்று முழுமனத்துடன் ஏற்று நுகர்பவர்; அன்று ஆம் கால் அல்லல் படுவது எவன் - மற்றத் தீவினைப் பயன்களாகிய துன்பங்கள் நேருங்கால் அவற்றையும் அவ்வாறே ஏற்று நுகராது துன்புறுவது ஏனோ?
இருவினையுந்தாமே செய்தவையாதலாலும், வினைப்பயன் எவரையும் விடாமையாலும், அவற்றுள் ஒன்றன் பயனை மட்டும் ஏற்று நுகர்ந்து விட்டு இன்னொன்றன் பயனை ஏற்காது வருந்துவது அறிவன்றென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு
மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
நல்வினைப் பயனாக நன்மை வருகிறபோது இன்ப மடைகிற மனிதன் தீவினைப் பயனாகத் தீமை வருகிறபோது ஏன் துன்பப்பட வேண்டும்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நல்வினை விளையுங்கால் இன்பம் என்று அனுபவிப்பவர்கள், மற்ற தீவினை விளையும்போது துன்பங்களை அனுபவிக்காமல் வருந்துவது ஏனோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நல்வினை நிகழுங்கால் நன்று என்று மகிழ்பவர்கள். தீவினை நிகழுங்கால் துன்பம் என்று வருந்தித் துடிப்பது ஏன்?
|
|
Translation
|
|
When good things come, men view them all as gain;
When evils come, why then should they complain?.
|
|
Explanation
|
|
How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?.
|
|
Transliteration
|
|
Nandraangaal Nallavaak Kaanpavar Andraangaal
Allar Patuva Thevan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|