|
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா.
இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பால் அல்ல பரியினும் ஆகாவாம் -ஊழால் தமக்கு உரிய வல்லாத பொருள்கள் வருந்திக் காப்பினும் தம்மிடத்து நில்லாவாம்; தம உய்த்துச் சொரியினும் போகா -ஊழால் தமக்குரிய பொருள்கள் வெளியே கொண்டுபோய்க் கொட்டினும் தம்மைவிட்டு நீங்கா.
பொருள்களின் இருப்பும் போக்கும் ஊழாலன்றிக் காப்பாலும் காவாமையாலும் நிகழா என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும்
அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு
போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
எவ்வளவு பரிந்து முயன்றாலும் தமக்கு வந்து சேரத்தக்க நல்வினை இல்லாத பொருள்கள் கிடைத்துவிடமாட்டா. நல்வினையால் தமக்குச் சொந்தமாகச் சேர்ந்துள்ள பொருள்களை வேண்டாமென்று எங்கேனும் கொண்டுபோய்க் கொட்டி விட்டாலும் அவை மீண்டும் தம்மிடமே வந்து சேர்ந்துவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஊழினால் தம்மிடம் இருக்கக் கூடாத பொருள்கள், வருந்திக் காப்பாற்றினாலும் தம்மிடத்து நில்லாமல் போகும். ஊழினால் தம்மிடம் இருக்க வேண்டிய பொருள்கள் புறத்தே கொண்டு போய்த் தள்ளினாலும் தம்மைவிட்டுப் போகாவாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர்க்கு உரியன அல்லாதவற்றை எவ்வாறு பேணினும் அவை தங்குவதில்லை. அவர்க்கு உரியனவற்றை எவ்வளவு தவிர்த்தாலும் அவை நீங்குவதில்லை.
|
|
Translation
|
|
Things not your own will yield no good, howe'er you guard with pain;
Your own, howe'er you scatter them abroad, will yours remain.
|
|
Explanation
|
|
Things not your own will yield no good, howe'er you guard with pain;
Your own, howe'er you scatter them abroad, will yours remain.
|
|
Transliteration
|
|
Pariyinum Aakaavaam Paalalla Uyththuch
Choriyinum Pokaa Thama
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|