|
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின், பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா. ('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக.
மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - மெய்யோதியர்பாற் கேட்ட செவியறிவுறுத்தப் பொருளை ஓர் ஓகியின் உள்ளம் உத்தியானும் அளவைகளானும் தெளியவாராய்ந்து உண்மைப் பொருளை யுணருமாயின்; பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மீண்டுப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டியதில்லை, ஓதியர் = ஞானியர் (வ.) ஒகி = யோகி(வ.)
அவைகள் முன்னரே 242-ஆம் குறளுரையிற் கூறப்பட்டன. இங்குத் தெளிவு கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு
உண்டு எனக் கருத மாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
கல்வி கேள்விகளைக் கொண்டு என்றைக்கும் உள்ள பொருள் எது என்பதைத் தீர்மானமாக அறிந்து அதை உணர்ந்தால் மறு பிறப்பை எண்ண வேண்டியதில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கேட்டுணர்ந்த உபதேச மொழியால் ஒருவன் உள்ளம் நல்வழியில் தெளிய ஆராய்ந்து மெய்ப்பொருளினை உணர்ந்தால் அவனுக்கு மாறிப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மெய்ப்பொருள் ஞானம் ஒருவன் ஆய்ந்து தேர்ந்து தெளிவான் ஆயின் அவன் பிறவித் துன்பத்தில் உழல வேண்டிய அவசியம் இல்லை.
|
|
Translation
|
|
The mind that knows with certitude what is, and ponders well,
Its thoughts on birth again to other life need not to dwell.
|
|
Explanation
|
|
Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.
|
|
Transliteration
|
|
Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap
Perththulla Ventaa Pirappu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|