Thirukural

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி.

கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். ('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.
தேவநேயப் பாவாணர் உரை:
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மை மக்கட் பிறப்பில் மெய்ப்பொருள் நூல்களைக் கற்றும் பட்டறிவுள்ள மெய்யோதியரால் செவியறிவுறுத்தப் பெற்றும் மெய்ப்பொருளுணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வராத வழியைப் பெறுவர். உலகநூற் கல்வி போன்றே மெய்ப்பொருட் கல்வியும் பல்வேறு நிலையிற் பல்வேறு ஆசிரியர்பாற் கற்றுங் கேட்டுமறிய வேண்டியிருப்பதால் 'கற்று' என்றும், நிலவுலகிலன்றித் தேவருலகில் வீடுபேற்று முயற்சிக்கிடமின்மையால் 'ஈண்டு' என்றுங் கூறினார். 'ஈண்டுவாரா நெறி' வீட்டு நெறி. வீட்டையளிப்பது இறைவனேயாதலால் அவனை யறிவதற்கு ஆம்புடைகள் (உபாயங்கள்) கல்வி, கேள்வி, தெளிவு, உன்னம் (பாவனை) என நான்காம். கேள்வியும் கல்வியுளடங்குமாதலின் அவையிரண்டும் இங்கே ஒருங்கே கூறப்பட்டன.
கலைஞர் உரை:
துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அந்த முறையில் ஆராய்ந்தறியக்) கற்றுக்கொண்டு இங்குள்ள பொருள்களில் எது மெய்ப்பொருள் என்று கண்டறியக் கூடியவர்கள் மறுபடியும் இங்கே பிறவாதிருக்கும் மார்க்கத்தை அடைவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மக்கட்பிறவியில் குருமார்களாகிய ஞானி களிடம் கேட்டறிந்து மெய்ப் பொருளினை உணர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பில் வாராத நெறியினை அடைவர்.
தமிழ்க்குழவி உரை:
கற்க வேண்டியவற்றைக் கற்று மெய்ப்பொருளின் உண்மைநிலையை அறிந்தவர் மீண்டும் மீண்டும் பிறவா நிலையை அடைவர்.
Translation
Who learn, and here the knowledge of the true obtain, Shall find the path that hither cometh not again.
Explanation
They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.
Transliteration
Katreentu Meypporul Kantaar Thalaippatuvar Matreentu Vaaraa Neri

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 356