Thirukural

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை.

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை -நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை -துறந்தார்க்கு இழிபு. (தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடுஎய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றிச் செய்து சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.)
மணக்குடவர் உரை:
நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது. எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை -நிலையில்லாத பொருட்களையும் நிலைமைகளையும் நிலையானவை யென்று கருதும் பேதைமை; கடை - கடைப்பட்ட அறியாமையாம். நாள்தொறும் மாந்தர் எல்லாப் பருவத்திலும் இறக்கக்கண்டும், குறிப்பிட்ட அகவைக்கு மேற்பட்டவர் ஒருவரும் உலகத்தில் இல்லாமையறிந்தும், இளைஞர் முதியராகவும் செல்வர் வறியவராகவும் மாறுவதைப் பார்த்தும், யாக்கையும் இளமையும் செல்வமும் தமக்கு நிலைக்குமென்று கருதுவது பேதைமை யாதலால் "புல்லறிவாண்மை" என்றும் , இறுதிவரை ஒருபோதும் அறிவுபெறாமையாற் "கடை" என்றுங் கூறினார்.
கலைஞர் உரை:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நிலையில்லாத பொருள்களை நிலையுள்ளனவாக நினைக்கின்ற அற்ப புத்திதான் இழிவுண்டாக்குவது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நிலையில்லாத பொருள்களை நிலையானவை களென்று கருதுகின்ற புன்மையான அறிவு துறந்தார்க்கு இழிவாகும்.
தமிழ்க்குழவி உரை:
உலகத்தில் எதுவுமே நிலையில்லாதது. அவற்றை நிலையானவை என்று எண்ணி இருக்கும் சிற்றறிவானது மிகவும் தாழ்ந்த நிலையை உடையது.
Translation
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!.
Explanation
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).
Transliteration
Nillaadha Vatrai Nilaiyina Endrunarum Pullari Vaanmai Katai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 331