|
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை.
இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - அருவருப்பான நோயுடம்புடன் வறுமை கூர்ந்து இழிதொழில் செய்து உயிர்வாழ்பவரை; உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - முற் பிறப்பில் உண்ணும் பொருட்டு உயிர்களை அவை நின்ற உடம்பினின்று நீக்கியவர் என்று சொல்வர் வினைப்பயன் அறிந்தோர்.
செல்லாமை-வாழ்க்கை நடவா வறுமை . இழிதொழில் இரந்து பிழைத்தல்.
"அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோ யெழுபவே - யக்கால்
அலவனைக் காதலித்துக் கான்முறித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்." (நாலடி. 123).
என்பது செயிருடம்பிற்குக் கரணியம் (காரணம்) கூறிற்று.
|
|
கலைஞர் உரை:
|
|
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே
கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(உலகத்தில்) உடம்பிலிருந்து வியாதிகள் நீங்காதவர்களாக எந்நேரமும் நோயால் துன்பப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள், முற்பிறப்பில் உயிர்களை உடம்பிலிருந்து நீக்கும் கொலைகளைச் செய்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பார்க்கக் கூடாத நோயுடம்புடனே வறுமை யுள்ள வாழ்க்கையினை யுடையவர்களை, முற்பிறப்பில் உயிர்களின் உடம்பினின்றும் நீக்கியவர்கள் என்று அறிந்தோர் கூறுவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நோய்வாய்ப்பட்டு அழுந்தி துன்பமயமான தீய வாழ்க்கைக்கு ஆட்பட்டவர்கள், பிற உயிர்களைக் கொன்று, உண்டு வாழ்ந்தவர்களாக இருப்பர்.
|
|
Translation
|
|
Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.
|
|
Explanation
|
|
(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).
|
|
Transliteration
|
|
Uyir Utampin Neekkiyaar Enpa Seyir Utampin
Sellaaththee Vaazhkkai Yavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|