|
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். (பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே- ஒருவனுக்குப் பெருஞ்செல்வஞ் சேர்வது ஆடலரங்கிற்குக் காண்போர் கூட்டம் வந்து கூடுவது போன்றதே; போக்கும் அது விளிந்த அற்று- அச்செல்வங் கெடுவதும் அவ்வாடல் முடிந்தபின் அக்கூட்டங் கலைவது போன்றதே.
எத்துணைச் செல்வமும் கெடுமென்றற்குப் 'பெருஞ்செல்வம்' என்றார். 'போக்கும்' என்னும் எச்சவும்மை வருகையைத் தழுவிற்று. பல்வேறிடங்களிலிருந்து பல்வகை மக்கள் வந்து ஆடல் முடிந்தபின் போய்விடுவது போல, பல்வேறு வழிகளில் திரண்ட பல்வகைச் செல்வமும் நல்வினைப் பயன் நீங்கினவுடன் போய்விடும் என்பது. உவமைப் பொருள் விரிவாம். ஏகாரம் தேற்றம்
|
|
கலைஞர் உரை:
|
|
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து
முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப்
போன்றதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(செல்வம் நிலையற்றது.) ஒருவனுக்குச் செல்வம் வந்து சேர்வது, பல இடங்களிலிருந்து ஒவ்வொருவராக வந்து ஓர் இடத்தில் கூத்தாட்டம் பார்க்கப் பெருங்கூட்டம் கூடுவது போன்றது. அந்தச் செல்வம் தொலைந்து போவதும் அந்தக் கூட்டம் கலைந்து போவதைப்போல் வெகு விரைவில் இல்லாது போகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்குப் பெரிய செல்வம் வருதல் கூத்தாட்டத்தினைப் பார்க்க வந்த கூட்டம் போன்றதாகும். அச்செல்வம் அவனை விட்டுப் போவது, கூத்து முடிந்தவுடன் அக்கூட்டம் போவது போன்றதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கூத்தாட்டு அரங்கினுள் சேர்ந்துபின் கலைகின்ற மக்கள்போல் சிறிது சிறிதாகச் சேரும் செல்வம் மொத்தமாக ஒருநாள் நீங்கிவிடும் தன்மையது.
|
|
Translation
|
|
As crowds round dancers fill the hall, is wealth's increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.
|
|
Explanation
|
|
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.
|
|
Transliteration
|
|
Kooththaattu Avaik Kuzhaath Thatre Perunjelvam
Pokkum Adhuvilin Thatru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|