Thirukural

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம், நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார். ('உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
இக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.
தேவநேயப் பாவாணர் உரை:
நோய் எல்லாம் நொய் செய்தார் மேலவாம்- துன்பங்களெல்லாம் முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்தாரையே சார்வனவாம்; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார்- ஆதலால், தம்முயிர்க்குத் துன்பம் வேண்டாதவர் பிறிதோர் உயிர்க்குத் துன்பஞ் செய்யார். "தன்வினை தன்னைச் சுடும்". "வினைவிதைத்தவன் வினை அறுப்பான்". ஆதலால் தன்னலம் பற்றியேனும் பிறருக்குத் தீமை செய்யாதிருக்க என்று படர்க்கையில் வைத்துக் கூறினார். இதில் அமைந்துள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை.
கலைஞர் உரை:
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) பிறருக்குச் செய்யும் துன்பங்களெல்லாம் செய்தவர்களுக்கே வந்து சேரும்; அதனால் தமக்குத் துன்பம் வரக்கூடாது என்று விரும்புகிறவர்கள் பிறருக்குத் துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
துன்பமெல்லாம், பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்தவர் மேலதேயாகும். ஆதலால், தம் உயிர்க்குத் துன்பம் வேண்டாதவர்கள் பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்ய மாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
துயரம் துன்பம் என்பதெல்லாம், அதனைச் செய்தவர்களுக்கே தான், துன்பமற்று வாழ விழைவார் எச்சூழலிலும் யார்க்கும் அதனைச் செய்யார்.
Translation
O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill.
Explanation
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.
Transliteration
Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar Noyinmai Ventu Pavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 320