|
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும். (இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும்.
இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இன்னா எனத்தா னுணர்ந்தவை - இவை மக்கட்குத் தீங்கு விளைப்பன என நால்வகை அளவைகளாலும் தான் அளந்து அறிந்தவற்றை; பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும்- பிறனிடத்துச் செய்தலைப் பொருந்தாமை துறந்தவனுக்கு வேண்டும்.
பட்டறிவாலும் உணர்ச்சியாலும் உண்மை யென்றறிந்தவற்றை 'உணர்ந்தவை' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து
அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால் அறிவுடையவன்) தீமை உண்டாக்கக் கூடியவை என்று தான் உணருகின்ற எதையும் இன்னொருவருக்குச் செய்துவிடாமல் இருக்க வேண்டும்,
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இவை மக்களுக்குத் துன்பம் தருபவை என் அறிந்தவற்றைத் துறவியானவன் பிறரிடத்தில் செய்வதைக் கருத்தில் கொள்ளாதிருத்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தனக்குத் துன்பம் தருபவை என்று உணர்ந்து கொண்டவற்றை எந்த சூழலிலும் தான் பிறருக்குச் செய்யாதிருத்தல் வேண்டும்.
|
|
Translation
|
|
What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.
|
|
Explanation
|
|
Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.
|
|
Transliteration
|
|
Innaa Enaththaan Unarndhavai Thunnaamai
Ventum Pirankan Seyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|