Thirukural

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் – எத்தகையோரிடத்தும் சினங்கொள்ளுதலைக் கருதுவதுஞ் செய்யற்க; அதனான் தீய பிறத்தல் வரும் – அதனால் பல்வகையான தீமைகள் உண்டாகும். வலியார், ஒப்பார், எளியார் என்னும் முத்திறத்தாரும் அடங்க “யார்மாட்டும்” என்றார். உடனேயும் வெளிப்படையாகவும் தீங்கு செய்ய இயலாத எளியோரும் உள்ளத்தில் வயிரங்கொள்ளின், உறக்க நிலையிலும் மயக்க நிலையிலும் தனித்த நிலையிலும் வலியார்க்குத் தீங்கு செய்யத் துணிவாராதலானும், சினங்கொள்ளுதலும் அதனால் தீயன செய்யக் கருதுதலும் தூய உள்ளத்தராயிருக்கவேண்டிய துறவியர்க்குப் பொருந்தாமையானும், “தீயபிறத்த லதனாள் வரும்” என்றார். “மறத்தல்’ தல்லீற்று வியங்கோள்.
கலைஞர் உரை:
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால் யாரிடத்திலும் கோபங் கொள்ளக்கூடாது. ஏனெனில், தீங்கு செய்யத் தூண்டுகின்ற மனத்தாபம் கோபத்தால் தான் உண்டாகிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
யாவரிடத்தும் கோபத்தினை மறந்து விடுதல் வேண்டும். ஒருவருக்குத் தீமைகள் எல்லாம் அதனாலேயே வரும்.
தமிழ்க்குழவி உரை:
எவரிடம் ஆயினும் கோபம் கொள்வதைத் தவிர்த்து அதை மறத்தல் வேண்டும். கோபம் கொள்வதனால் வாழ்வில் பல தீங்குகள் நேர ஏதுவுண்டு.
Translation
If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget.
Explanation
Forget anger towards every one, as fountains of evil spring from it.
Transliteration
Maraththal Vekuliyai Yaarmaattum Theeya Piraththal Adhanaan Varum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 303