|
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவனது சினம் அது தாக்க முடியாத வலியார் மேல் எழின் தனக்கே தீங்காம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - அது தாக்கக் கூடிய எளியார் மேல் எழினும் அதைவிடத் தீயவை வேறில்லை.
செல்லிடத்துச் சினத்தால் விளைவது இம்மைத் துன்பமே. ஆயின், செல்லாவிடத்துச் சினத்தால் விளைவன இம்மைப்பழியும் மறுமைத் துன்பமுமாம். அதனால் அதனினுந் தீயன வேறில்லை யென்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும்.
மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடு
வேறொன்றுமில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எந்த இடத்திலும் கோபம் தனக்கே தீங்கு உண்டாக்கும்.) செலுத்தக்கூடாத இடத்திற் கோபத்தைச் செலுத்தினால் தனக்கு உடனே தீமை உண்டாக்கும்; செலுத்தக்கூடிய இடத்தில் கோபத்தைச் செலுத்தினால் செலுத்திய இடத்துக்கும் உடனே தீங்கு உண்டாவதுடன் பின்னால் தனக்கும் பாவமுண்டாக்கும். அதனால் அதைவிடத் தீமை தருவது வேறில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கோபம் தன்னைவிட வலியவர்கள் மேல் உண்டாகுமானால் தனக்கே தீமையாகும். மற்ற எளியவர்கள் மீது சென்றால் அதனைவிடத் தீமையானது பிற இல்லையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தன்னினும் வலியார் மேல் சினம் கொள்வதால் தீங்கு நேரும். தன்னினும் மெலியார் மேல் சினம் கொள்வது அதை விடத் தீமை பயக்கும் செயல்.
|
|
Translation
|
|
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.
|
|
Explanation
|
|
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.
|
|
Transliteration
|
|
Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum
Iladhanin Theeya Pira
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|