Thirukural

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.
தேவநேயப் பாவாணர் உரை:
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் - எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டொழுகுதலால்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் துறவியரே. அந்தணர் என்னுஞ்சொல் அழகிய குளிர்ந்த அருளையுடைவர் என்னும் பொருளது. அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொண்டு அன்பு செய்தல். இது துறவியர்க்கே இயலும். அதனால், அருளுடைமையைத் துறவுநிலைக்குரிய முதலறமாகக் குறித்தார் திருவள்ளுவர். தமக்கு வாழ்வளித்துக் காக்கும் தலைநாகரிக மக்களையுந் தாழ்வாகக் கருதும் தந்நல ஆணவப் பிராமணர் அந்தணராகார் என்பது, இதனால் அறிவிக்கப்பட்டது. பூணுதல் நோன்பாக மேற்கொள்ளுதல். 'என்போர்' செயப்பாட்டுவினை செய்வினையாக நின்றது; 'மற்று' அசைநிலை. உம்மை முற்றும்மை.
கலைஞர் உரை:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அவர்கள் சாந்தத்தின் நிலையமானவர்கள்; தர்மம் தவற மாட்டார்கள். எல்லாச் சீவராசிகளிடத்தும் அன்பையே மேற் கொண்டு நடப்பவர்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எல்லா உயிர்களிடத்திலும் அருளுடன் நடந்துகொள்ளுவதால் அந்தணர் என்று சொல்லவப்படுபவர் அறவோர்களாகிய முனிவர்களே யாவார்கள்.
தமிழ்க்குழவி உரை:
அந்தணர் என்பவர் யார்? எல்லா உயிர்களிடத்தும் அருளொழுக்கம் கொண்டு அறவழி நிற்பாரே அந்தணர்.
Translation
Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,
Explanation
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.
Transliteration
Andhanar Enpor Aravormar Revvuyir Kkum Sendhanmai Poontozhuka Laan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 30