|
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; 'கணம் ஏயும்' காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது. (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - நற் குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடியேறி நின்ற முனிவரின் கடுஞ்சினத்தை; கணமேயும் காத்தல் அரிது - சினக்கப்பட்டாரால் நொடி நேரமேனுந் தடுத்தல் முடியாது.
குன்று சிறுமலை. இங்கு மலையென்னும் பொதுப் பொருளது எரிக்கும் நெருப்புப் போன்றது வெகுளி. வேகு - வெகுள் - வெகுளி திண்மையும் பெருமையும் வண்மையும் பற்றி நற்குணத்தொகுதியை மலையாக வுருவகித்தார், இக்குறட்கு, நற்குணமலையாகிய முனிவர் நொடிநேரமேனும் தம் உள்ளத்திற் சினத்தைப் பேணுதலில்லை யென்று பொருள் கூறுவாருமுளர்.அது உரையன்மை,முந்தின குறளாலும் "சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரம்" என்னுங் கம்பர் கூற்றாலும் ( பால. தாடகை. 71) கண்டு தெளிக. உம்மை இழிவு சிறப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அவர்கள் சொன்னது பலிக்குமென்றால் அவர்கள் பிறரைச் சபித்துத் தீமை செய்ய மாட்டார்கள். தமது செல்வாக்கை நன்மைக்கே செலவிடுவார்கள்) நீத்தார் எனப்படுவோர் நல்ல குணம் என்ற மலையின் உச்சியிலே இருப்பார்கள். அதனால் அவர்களுக்குக் கோபமே வராது. வந்தாலும் கண நேரங்கூடத் தங்காது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உயர்ந்த குணமென்னும் குன்றின்மேல் நின்ற முனிவர்களுடைய கோபம், இருப்பது கணநேரமேயானாலும் கோபிக்கப்பட்டவர்களால் அக்கோபம் தடுப்பதற்கு முடியாததாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உயர்பண்பின் உச்சத்தில் நிற்போர் சினப்படலாகாது; சினந்தால், அச்சினத்திற்காட்பட்டோர் தம்மைக் காத்துக் கொள்ளுதல் அரிது.
|
|
Translation
|
|
Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,
|
|
Explanation
|
|
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.
|
|
Transliteration
|
|
Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|