|
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.
|
|
மணக்குடவர் உரை:
|
|
முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சிறப்பு ஈனும் - மறுமையில் விண்ணுலக வின்பத்தையும் வீடுபேற்றையுந் தரும்; செல்வமும் ஈனும் - இம்மையிற் செல்வத்தையுந்தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ - ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தைவிடச் சிறந்த ஆக்கம் எதுதான்?
எல்லாப் பேற்றுள்ளும் சிறந்த பேரின்ப வீடும் சிற்றின்பத்துட் சிறந்த விண்ணின்பமும் சிறப்பெனப் பெற்றன. செல்வமும் விண்ணின்பமும் இல்லறத்தார்க்கும் வீடு துறவறத்தார்க்கும் உரியனவாம். ஆகுவது ஆக்கம். ஆகுதல் மேன்மேலுயர்தல் 'அறத்தினூஉங்கு' இன்னிசை யளபெடை. ஆக்கம் என்றது அகற்கேதுவை. ஓ அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது நிச்சயம்; செல்வமும் வரலாம்; ஆதலால் தர்மத்தைக் காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது என்ன இருக்கிறது?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பெருஞ்சிறப்பினையும் செல்வத்தினையும் அளிக்கின்ற அறத்தினைவிட மக்கள் உயிருக்கு மேம்பட்ட செல்வம் வேறு என்ன இருக்கின்றது?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறம் சிறப்புகளை எல்லாம் தருகிறது; செல்வத்தையும் தருகிறது. மாந்தர்க்கு இதை விட நன்மை தருவது வேறு எதுவாக இருக்க முடியும்?
|
|
Translation
|
|
It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain?
|
|
Explanation
|
|
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?
|
|
Transliteration
|
|
Sirappu Eenum Selvamum Eenum Araththinooungu
Aakkam Evano Uyirkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|