|
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நிறைமொழி மாந்தர் பெருமை - பயன் நிறைந்த சொற்களையுடைய துறவியரின் பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டிவிடும்.
இக்குறள்,
"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப".
என்னும் தொல்காப்பிய நூற்பாவைத் ( 1484 ) தழுவியது. மறை மொழி அல்லது மந்திரம் என்பது, வாய்மொழியும் சாவிப்பும் என இருவகைப்படும். திருமூலரின் திருமந்திரமும், நம்மாழ்வாரின் திரு வாய்மொழியும் வாய்மொழிபோல்வன; கவுந்தியடிகள் காவிரித் தென்கரைச் சோலையொன்றில் வம்பப்பரத்தையும் வறுமொழியாளனுமான இருவரை நரிகளாக்கியது சாவிப்பு. மறை ( வேத ) த் தன்மையுடைய மொழி மறைமொழி ; மனத்திண்மையாற் கருதியது நிறை வேறும் மொழி மந்திரம் . மன் + திரம் = மந்திரம். முன்னுதல் = கருதுதல். முன் - மன். திரம் = திறம். ஒ.நோ : மன்று - மந்து - மந்தை. முரி - முறி ( வளை ).
ஆரியர் வருகைக்கு முற்பட்டதும், எண்வகை வனப்பான பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுநிலத்திற்கும் இலக்கியமாயிருந்ததுமான முதலிரு கழகத் தூய தமிழிலக்கியம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதென அறிக.
|
|
கலைஞர் உரை:
|
|
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
அந்த மகான்கள், சொன்னது பலிக்கும் தவவலிமை யுள்ளவர்கள். அவர்கள் பெருமையை வேதங்கள் காட்டுகின்றன.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பயன் நிறைந்த மறைமொழி எனப்படும் சொற்களைச் செல்லும் முனிவருடைய பெருமையினை அவர்கள் ஆணையாகக் சொல்லும் அச்சொற்களே (மறைமொழி) காட்டிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நிறைவான வாக்குகளால் நிலைத்து நிற்கும் சான்றோரின் பெருமைகளை அவர்கள் வழங்கியருளிய நல்லுரைகளே நமக்குக் காட்டி நிற்கும்.
|
|
Translation
|
|
The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.
|
|
Explanation
|
|
The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.
|
|
Transliteration
|
|
Niraimozhi Maandhar Perumai Nilaththu
Maraimozhi Kaatti Vitum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|