|
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல.
இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகிய ஆங்கு-பொருட் செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலக வின்பம் இல்லாததுபோல; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை-அருட் செல்வம் இல்லாதவர்க்கு வீட்டுலக இன்ப மில்லை .
அவ்வுலகம் இவ்வுலகம் என்பன சேய்மையும் அண்மையும் என்று வந்த பெயர்கள். உலகம் என்பது ஈரிடத்தும் ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.
அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும்
சிறப்பாக அமையாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(இல்லறத்துக்குப் பொருள் முக்கியம்; துறவறத்துக்கு அருள் முக்கியம்.) செல்வம் இல்லாதவன் இந்த உலகத்தில் வாழ்க்கை நடத்த முடியாது. அதுபோல் சீவகாருணியம் இல்லாதவன் மோட்ச உலகத்தில் வாழ்வு பெற முடியாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாதலைப் போல உயிர்கள் மீது அருளில்லாதவர்களுக்கு அவ்வுலகப் பேரின்பம் இல்லையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செல்வம் இல்லாதவர்களுக்கு இவ்வுலகில் சிறந்த வாழ்க்கை அமையாது. அதுபோல அருள் இல்லாதவர்களுக்கு வானக வாழ்க்கை அமையாது.
|
|
Translation
|
|
As to impoverished men this present world is not;
The 'graceless' in you world have neither part nor lot.
|
|
Explanation
|
|
As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.
|
|
Transliteration
|
|
Arulillaarkku Avvulakam Illai Porulillaarkku
Ivvulakam Illaaki Yaangu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|