|
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை. ( 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடையராதலும் கூடும்; அருளில்லாதார் கெட்டார், பின்பு ஆக்கமுண்டாகாது.
இது பொருளின்மையேயன்றி எல்லாக் கேடு முண்டாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பொருள் அற்றார் ஒருகால் பூப்பர்-ஏதேனும் ஒரு வகையிற் செல்வத்தை யிழந்தவர், முயற்சியால் மீண்டும் ஒருகால் அதைப் பெற்றுப் பொலிவடைவர்; அருள் அற்றார் மற்று ஆதல் அரிது-ஆயின், அருட் பண்பை யிழந்தவரோ ஒரேயடியாய் அழிந்தவராவர்; பின்பு ஒருகாலும் ஆக்கம் பெறார்.
செல்வத்தை யிழந்தவர் மீண்டும் செல்வம் பெற்று இவ்வுலக இன்பத்தை நுகரலாம்; ஆயின் அருளைக் கைவிட்டவர் மறுமையில் வீட்டின்பம் நுகர்தற்கு மீண்டும் இம்மையில் முயற்சி செய்ய முடியாது என்பது கருத்து. 'மற்று' பின்மைப் பொருளது.
|
|
கலைஞர் உரை:
|
|
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை
இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பொருட் செல்வத்தை இழந்துவிட்டவர்களுக்கு அது மீண்டும் எங்கிருந்தாவது வந்து அவர்கள் செழிப்படைய முடியும். ஆனால் அருட் செல்வத்தை மனத்திலிருந்து இழந்துவிட்டால் மீண்டும் அது தானாக வந்துசேர முடியாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வறுமையிலிருந்தோர் ஒரு காலத்தில் செல்வத்தில் மிகுந்தோர் ஆவர். அவ்வாறு இல்லாமல் அருள் அற்றவர் அழிந்தோரேயாவர். பின்பு ஒரு காலத்திலும் அருளுடையவர் ஆவது இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொருளை இழந்தவர்கள் மீண்டும் அதனைப்பெற இயலும். ஆனால் அருள் இல்லாதவர்கள் இழப்புக் குள்ளானவர்களே, அதனை மீண்டும் பெறுதல் அரிது.
|
|
Translation
|
|
Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose 'benevolence', lose all; nothing can change their doom.
|
|
Explanation
|
|
Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.
|
|
Transliteration
|
|
Porulatraar Pooppar Orukaal Arulatraar
Atraarmar Raadhal Aridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|