Thirukural

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்.

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர். இது பொருளில்லையாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்-உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து ஒழுகுவார்; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர்-முற்பிறப்பில் அறமாகிய உறுதிப்பொருளைத் தேடாது இப்பிறப்பிலும் அதை மறந்தவர் என்பர் அறிவுடையோர்.
கலைஞர் உரை:
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
சீவகாருணிய ஒழுக்கத்தைவிட்டு அதற்கு மாறான காரியங்களைச் செய்கிறவர்கள் கையிலிருந்த பண முடிப்பை வைத்த இடம் மறந்துபோய்த் திண்டாடுகிறவர்களுக்கு ஒப்பாவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உயிர்களிடம் காட்டப்படும் அருளிலிருந்து நீங்கிக் கொடுமைகளைச் செய்து நடப்பவர்கள் உறுதிப் பொருளைச் செய்யாமல் தாம் துன்புறுகின்றமையை மறந்தவர்கள் என்று செல்லப்படுவார்கள்.
தமிழ்க்குழவி உரை:
அருள் இல்லாத தன்மையராய்ப் பிறர்க்குத் தீங்கு செய்து வாழும் மாந்தர் வையத்தில் பொருளற்றவராய் மாய்ந்து கெடுவர்.
Translation
AGain of true wealth oblivious they eschew, Who 'grace' forsake, and graceless actions do
Explanation
(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer).
Transliteration
Porulneengip Pochchaandhaar Enpar Arulneengi Allavai Seydhozhuku Vaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 246