|
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல்.
தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நிரப்பிய தாமே தமியர் உணல்-தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி வறியார்க் கொன்றீயாது தாமே தமித்துண்டல்; மன்ற-திண்ணமாக; இரத்தலின் இன்னாது-இரத்திலினும் தீயதாம்.
ஆசைக்கோரளவில்லை யாதலின், ஈயாத கஞ்சர் மேன்மேலும் பொருளீட்டற் பொருட்டு இடைவிடாது உடலையும் உள்ளத்தையும் வருத்தி, எத்துணைப் பொருளீட்டினும் எள்ளளவும் பொந்திகை (திருப்தி) யின்மையால் உண்மையிற் செல்வராயினும் உள்ளத்தில் வறியராய், இன்பமும் அறப்பயனும் ஒருங்கே தரும் பாத்துண்டலின்றி நடைப்பிணமாய் உழல்வதினும்; ஆசையுங் கவலையுமில்லாத இரப்போர் உடல் வருத்தமின்றித் தாம் பெற்றதைக் கொண்டு மகிழ்வதோடு, தாம் இரப்பெடுத்ததையும் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை மேலாதலின்; 'இரத்தலினின்னாது' என்றார். 'மன்ற' தேற்றப் பொருளிடைச் சொல் . 'நிரப்பிய' செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்
தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்
கொடுமையானது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஈகைக் குணத்துக்கும் பெருஞ் செல்வம் வேண்டுமென்பதில்லை) பிச்சை எடுக்கும் இழிவான நிலைமையுள்ளவனுக்கும்இன்னும் இழிவான நிலைமையை உண்டாக்கக்கூடியது எதுவென்றால், அவன் நெடுந்தெருக்களில் வீடுதோறும் பிச்சையெடுத்துநிரம்பக் கிடைத்த உணவிலும், இன்னொருவனுக்குக் கொஞ்சம் கொடுக்காமல் அத்தனையையும் தானே உண்பதுதான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நிறையச் சேர்த்து வைத்துத் தாமே உண்டு மகிழ்கின்ற செயல், பிறரிடத்தில் சென்று யாசிப்பதனைவிடத் துன்பம் தருவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தான் ஈட்டிய பொருளைத் தான் மட்டுமே துய்த்து வாழுத் தன்மை, ஒருவர்க்கு இரத்தலைக் காட்டிலும் இழிவானது ஆகும்.
|
|
Translation
|
|
They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!.
|
|
Explanation
|
|
Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.
|
|
Transliteration
|
|
Iraththalin Innaadhu Mandra Nirappiya
Thaame Thamiyar Unal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|