|
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை,
இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிகுந்த பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லார்.
அறிதற்கரிய பயன்களாவன நாள்கோளியக்கமும் மெய்ப் பொருளியலும் வீடுபேறும் முதலியன. பெரும்பயனில்லாத சொல்லை சொல்லாரெனவே , சிறு பயன் தரும் சொல்லும் அவர் வாயினின்று வராதென்பது பெறப்படும். இதனால் அரும்பயனாராயும் அறிவினார்க்குச் சிறுபயன் சொல்லும் அறவே விலக்கப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர்,
பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அறிவொழுக்கத்திற் சிறந்திருத்தலோடு பிறவிப் பயனை அறிந்தவர், ஆராய்ந்து பேசுவர்) அருமையான மனிதப் பிறவியினால்அடையக்கூடிய பயன்களை ஆராயக்கூடிய அறிவுடையவர்கள்பிறருக்கு மிகுந்த நன்மையுண்டாக்கக் கூடிய பேச்சையன்றி வேறுஎதையும் பேசமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறிதற்கரிய நற்பயன்களை ஆய்ந்தறியும் அறிவுடையவர்கள், மிக்க பயனில்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மற்றவர்க்குப் பயன்நல்கும் நிலைப்பாடுகளை அறிந்த அறிவுடையார் என்றும் பயன்இல்லாத சொற்களைப் பேசுவதில்லை.
|
|
Translation
|
|
The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.
|
|
Explanation
|
|
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.
|
|
Transliteration
|
|
Arumpayan Aayum Arivinaar Sollaar
Perumpayan Illaadha Sol
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|