Thirukural

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து.

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.)
மணக்குடவர் உரை:
ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும். இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பல்லாரகத்துப் பயன் சாராப் பண்பு இல்சொல் - ஒருவன் பலரிடத்தும் பயனொடு பொருந்தாத பண்பற்ற சொற்களைச் சொல்லுதல்; நயன் சாரா நன்மையின் நீக்கும் - நேர்மையொடு பொருந்தாது அவனை நற்குணத்தினின்று நீக்கும். சொற் பண்புகள் ஓசையினிமை , இலக்கண வழுவின்மை, பொருள் நன்மை முதலியன. சொல்லும் என்பது சொல்லெச்சம். 'சாரா' இரண்டனுள் முன்னது ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; பின்னது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
கலைஞர் உரை:
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பிறருக்கு அலுப்புண்டாக்குவதோடு அவனுக்கும் தீமை யுண்டாக்கும்.) பலபேர் கூடிய சபையில் பயனற்றதும் தகுதி யற்றதுமான பேச்சைப் பேசுவது கேட்கிறவர்களுடைய இன்பத்தைக் கெடுத்துப் பேசுகின்றவனுக்கு வரக்கூடிய நன்மைகளையும் தடுத்துவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நற்பயன் சேராத குணமில்லாத சொற்களைப் பலரிடத்திலும் ஒருவன் சொல்லுவானானால், அப்படிப் பட்டவனை, அவை நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
தமிழ்க்குழவி உரை:
பலர்கூடியிருக்கும் அவையில் ஒருவன் பயன்யாதுமில்லாதப் பண்பற்ற சொற்களைப் பேசிக் கொண்டிருப்பானாயின் அவை எந்த நன்மையையும் நல்காததாய் தகுதியிழக்கும்.
Translation
Unmeaning, worthless words, said to the multitude, To none delight afford, and sever men from good.
Explanation
The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.
Transliteration
Nayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap Panpilsol Pallaa Rakaththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 194