Thirukural

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்.

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.f
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.)
மணக்குடவர் உரை:
பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது
தேவநேயப் பாவாணர் உரை:
நீர்மை உடையார் பயன் இல சொலின் - இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல்வாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் -அதனால் அவருடைய உயர்வும் அது பற்றிய மதிப்பும் நீங்கிவிடும். 'சொலின்' என்னும் நிலைப்பாட்டு வினையெச்சம் சொல்லாமையை உணர்த்திற்று.
கலைஞர் உரை:
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல; கல்வி கேள்விகள் நிறைந்து) மேலான நிலைமையிலுள்ளவர்களானாலும், பல பேர் கூடிய சபையில் அவர்கள் வீண் வார்த்தைகளைப் பேசி விடுவார்களானால், அப்போதே அவர்களுடைய சீரும் சிறப்பும் அவர்களை விட்டு நீங்கிவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நற்குணமுடைய இனிய தன்மை வாய்ந்த பெரியோர்கள், பயனில்லாத சொற்களைச் சொன்னால் அவர்களுடைய மேன்மையும் நன்மதிப்பும் நீங்கிவிடும்.
தமிழ்க்குழவி உரை:
நற்பண்பே உடையவர்கள் பயனில்லாத சொற்களைப் பேசத் தலைப்படுவார்களாயின் அவர்களின் சீர்மையும் சிறப்பும் அகலும்.
Translation
Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense.
Explanation
If the good speak vain words their eminence and excellence will leave them.
Transliteration
Seermai Sirappotu Neengum Payanila Neermai Yutaiyaar Solin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 195