Thirukural

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்கமுன்னின்று பின்நோக்காச் சொல்.

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப் பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக, இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவனெதிரே நின்று கண்ணோட்டமின்றிச் சொல்லினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக. 'பின் ' ஆகு பொருளது. சொல்வான் செயல் சொல்லின் மேலேற்றப் பட்டது. இதில் வந்துள்ளது முரணணி.
கலைஞர் உரை:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கோள் சொல்லுவது அப்போதைக்கு நன்மையுண்டாக்குவது போலத் தோன்றினாலும் பின்னால் சொல்லுகிறவனுக்கே கேடுண்டாக்கும்) ஒருவனுக்கு முன்னால் நின்று, அவனைத் தாட்சிண்ய மில்லாமல் பேசிவிட்டாலும் குற்றமில்லை. ஆனால் ஒருவன் முன்னால் இல்லாதபோது பின்னால் வரக்கூடிய தீமைகளை எண்ணிப் பார்க்காமல் அவன்மீது கோள் சொல்லக் கூடாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு முன்பாக நின்று தாட்சண்யமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக; முன்னே இல்லாதபோது பின்னால் தனக்கு வரும் தீமையினைக் கருதாத சொற்களைச் சொல்லாது இருப்பாயாக.
தமிழ்க்குழவி உரை:
ஒருவரைக் கண்ணெதிர் காணுங்கால் கடுமையாகப் பேசினாலும், அவர் அருகில் இல்லாத போது பழித்துப் பேசுதல் தவறாகும்.
Translation
In presence though unkindly words you speak, say not In absence words whose ill result exceeds your thought.
Explanation
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.
Transliteration
Kannindru Kannarach Chollinum Sollarka Munnindru Pinnokkaach Chol

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 184