|
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும்.
இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறங்கூறுவா னொருவன் அறம் நல்ல தென்று சொல்லினும், அவன் அதை நெஞ்சாரச் சொல்கின்றானல்லன் என்னும் உண்மை; புறஞ் சொல்லும் புன்மையாற் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குக் கரணியமான சிறுதன்மையால் அறியப்படும்.
மனந்திருந்தாமையால் அவன் சொல் நம்பப்பெறா தென்பதாம். இனி, அறம் நல்ல தென்று ஒருவனது மனச்சான்று ஒப்புக் கொள்ளினும், வழக்கத்தினாலும் விருப்பினாலும் நெஞ்சுரமின்மையாலும் அவன் அதற்கு மாறாக ஒழுகலாமாகலின், ' அறங் கூறும் நெஞ்சத்தானன்மை' என்பதற்கு, அறத்தின் தன்மையைப் பற்றிக் கூறித் தகுதியுள்ள மனத்தானல்லாமை என்று உரைப்பினு மமையும்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே
அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து
கொள்ளலாம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கோள் சொல்லுவது சொல்லுகிறவனுக்கே தீமையுண் டாக்கும். ஏன்எனில்) நல்லது சொல்லும் எண்ணமுள்ளவன் அல்லனென்பதைக் கோள் சொல்லுகின்ற அற்பத்தனமே கோளைக் காதால் கேட்கிறவனுக்குக் காட்டிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறம் நல்லதென்று வாயினால் பேசுகின்றவனுடைய மனத்தில் அறத் தன்மை இல்லாதிருப்பதை அவன் புறங்கூறுவதற்குக் காரணமான புன்மைத்தன்மையினால் கண்டுகொள்ளப்படும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவன் அறவழியில் நாட்டமில்லாத நெஞ்சினன் என்பதை அவனின் புறம் கூறிவாழும் புன்மைப் பண்பினால் அறிந்துகொள்ளலாம்.
|
|
Translation
|
|
The slanderous meanness that an absent friend defames,
'This man in words owns virtue, not in heart,' proclaims.
|
|
Explanation
|
|
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.
|
|
Transliteration
|
|
Aranjollum Nenjaththaan Anmai Puranjollum
Punmaiyaar Kaanap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|