Thirukural

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.)
மணக்குடவர் உரை:
அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல். இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
புறன் அழீஇப் பொய்த்து நகை - ஒருவனைக்காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்டவிடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல்; அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறம் என்றே ஒன்றுமில்லையென அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம். அறனழித்தலினும் புறனழித்தலும் அல்லவை செய்தலினும் பொய்த்து நகையும் தீதென நிரனிறையாகக் கொள்க. பழித்துரையால் அழித்தலாவது பெயரைக் கெடுத்தல். ' அழீஇ' ஈரிடத்தும் பிறவினைப் பொருளில் வந்த சொல்லிசையளபெடை.
கலைஞர் உரை:
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
சாலமன் பாப்பையா உரை:
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அறத்தை அறிந்தவனாகவே இருந்தும் அறிந்தே தவறு செய்கிறவனானாலும்) அறத்தினின்றும் நழுவி அறமல்லாதவற்றைச் செய்வதைவிட ஒருவன் இல்லாத இடத்தில்™ மறைவில் இருந்து கொண்டு ஒருவனைப் பற்றிப் பொய்யான கோள்களைச் சொல்லி மகிழ்வது கொடியது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசி, கண்டபோது பொய்யாகச் சிரித்துப் பேசுதல் என்பது, அறம் இல்லையென அழித்துப் பேசி தீமைகளைச் செய்வதைவிடத் தீமையானதாகும்.
தமிழ்க்குழவி உரை:
அறநெறிகள் ஒழிய ஒருவன் பாவச் செயல்கள் செய்து வாழ்தலினும், ஒருவர் இல்லாதபோது பழித்துப் பேசி நேரில் காணும் போது பொய்யாக நடித்து நகைத்துப் பேசுதல் தீதாகும்.
Translation
Than he who virtue scorns, and evil deeds performs, more vile, Is he that slanders friend, then meets him with false smile.
Explanation
To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.
Transliteration
Aranazheei Allavai Seydhalin Theedhe Puranazheeip Poiththu Nakai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 182