|
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும்,
அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார் - இது அறமென்று தெளிந்து பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரிடத்து; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கான திறங்களையறிந்து அவற்றின்படியே சென்றடைவாள்.
'திரு' ஆகுபெயர். திறங்கள் காலமும் இடமும் வினையும் பிறன் பொருளை விரும்பாமையாற் செல்வம் சுருங்காதிருப்பதோடு புதிதாகத் தோன்றவுஞ்செய்யும் என்பது இதனாற் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர்
பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தர்மத்தை உணர்ந்து பிறருடைய பொருளை அபகரிக்கும் ஆசை கொள்ளாத அறிவுடையவர்களுடைய தகுதிக்குத் தக்கபடி செல்வ மகள் தானாகவே அவரிடம் வந்து சேருவாள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறத்தினை அறிந்து பிறர் பொருளினை விரும்பாத அறிவுடையார்களிடம் தான் சேர வேண்டிய இடமென்று அறிந்து செல்வமானது (திருமகள்) அவர்களிடத்திற்குப் போய்ச் சேரும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறநெறிகள் அறிந்து பிறர்பொருள்மேல் ஆசை கொள்ளாத அறிவுடையோர் தம் பண்புநலம் தெரிந்து செல்வம் தானாகவே சேரும்.
|
|
Translation
|
|
Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.
|
|
Explanation
|
|
Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.
|
|
Transliteration
|
|
Aranarindhu Veqkaa Arivutaiyaarch Cherum
Thiranarin Thaange Thiru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|