Thirukural

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் - அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன் , பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளைவிரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்தெண்ணிய மட்டிற்கெட்டு விடுவான். விருந்தோம்பல் ஒப்புரவொழுகல் ஈகை ஆகிய அறங்கட்கு அன்பும் , இரப்போர்க்கீதற்கு அருளும் வேண்டியிருப்பதால் , இல்லறமும் ஓரளவு அருள்நெறிப்பட்டதாம். ஆதலால் , இல்லறத்தைத் துறவறத்திற்கு ஆறென்று பரிமேலழகர் கூறியது முழுதும் பொருந்தாது. சூழ்வு வெளிப்பட்டவுடன் பொருளையிழக்க விருந்தாரால் தீங்குநேர்தலின் , 'சூழக்கெடும்' என்றார்.
கலைஞர் உரை:
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:
அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கல்வியறிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இல்லறத்தான் தெய்வக் கருணையை நம்பினவன்) தெய்வக் கருணையை நாடி இல்லற நெறி தவறாமல் வாழ்க்கை நடத்துகிறவன், பொருளில் ஆசை கொண்டு பொல்லாத செய்ய நினைத்தால் கெட்டுப் போவான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அருளாகிய அறம் என்பதனை விரும்பி நன்னெறியில் நின்றவன் பிறன் பொருளினை விரும்பித் தீமையான வழிகளை நினைப்பானாகில் கெட்டுவிடுவான்.
தமிழ்க்குழவி உரை:
அருள்உள்ளம் கொண்டு அறநெறியில் நின்றோரும் பிறர்பொருளை அடைந்திட எண்ணித் தீய செயல்களுக் காட்படின் அவர் பெற்ற பெருமைகள் தாழ்ச்சி யுறும்.
Translation
Though, grace desiring, he in virtue's way stand strong, He's lost who wealth desires, and ponders deeds of wrong.
Explanation
If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.
Transliteration
Arulveqki Aatrinkan Nindraan Porulveqkip Pollaadha Soozhak Ketum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 176