|
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின்,
இஃது அறிவுடையார் செய்யாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அஃகி அகன்ற அறிவு என் ஆம் - உணர்வால் நுணுகிப் பொருளாற் பரந்த ஒருவரது கல்வியறிவால் என்ன பயனாம்? வெஃகி யார்மாட்டும் வெறிய செயின் -அவர் பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் தம் அறிவொடு பொருந்தாத செயல்களைச் செய்வாராயின்.
யார் மாட்டும் வெறிய செய்தலாவது , நல்லார் பொல்லார் சிறியார் , பெரியார் , இளையார் மூத்தார் , ஆடவர் பெண்டிர், நலவர் பிணியர், என்னும் வேறுபாடின்றி , இழிந்தனவுங் கடியனவுஞ் செய்தல். வெறுமை அறிவென்னும் உள்ளீடின்மை. அறிவாற் பயனின்மையின் 'என்னாம்' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர
விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான்
என்ன பயன்?
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கூர்ந்த படிப்புள்ளவர்களிலும் பலர் வெஃகுகின் றார்களே!) கூர்ந்து கவனித்துக் கல்வி கற்று விரிந்த அறிவுடைய வர்கள் யாரானாலும் அவர்கள் பிறர் பொருளைக் கவர ஆசை கொண்டு வெறித்த செயல்களைச் செய்வாரானால் அவர்களுடைய அறிவு எதற்காகும்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பொருளை விரும்பி யாவரிடத்தும் அறத்துடன் பொருந்தாத செயல்களை அறிவுடையோர் செய்வாராயின், நுணுக்கமான பல நூல்களிலும் சென்ற அவர்களுடைய அறிவு என்ன பயன் உடையதாகும்?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நூல்களைக் கற்றறிந்து அறிவின்பாற் பட்டோரும், தேவை கருதிப் பிறர்பொருளைக் கவர எண்ணுவரேல் அவர் பெற்ற அறிவினால் யாது பயன்?
|
|
Translation
|
|
What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?.
|
|
Explanation
|
|
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?.
|
|
Transliteration
|
|
Aqki Akandra Arivennaam Yaarmaattum
Veqki Veriya Seyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|