Thirukural

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார். நலக்குரியார்- விரும்புதற்குரியார்.
தேவநேயப் பாவாணர் உரை:
நாமநீர் வைப்பின் - அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் ; நலக்கு உரியர் யார் எனின் - எல்லா நலங்களும் பெறுதற்குரியார் எவர் எனின் ; பிறற்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்குரியவளின் தோளைத் தழுவாதார். நாமம் அச்சம் இஃது உரிச்சொல். அகலம் , ஆழம் , தீயவுயிர்கள், கொந்தளிப்பு , நிலமுழுக்கு முதலியவற்றால் அஞ்சத்தக்கதாதலின், கடலை நாமநீர் என்றார். 'நலத்திற்கு' என்பது அத்துச் சாரியை தொக்கு நின்றது. 'தோள் தோய்தல்' இடக்கரடக்கல்.
கலைஞர் உரை:
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.
சாலமன் பாப்பையா உரை:
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படிப்பட்ட மன உறுதியுள்ளவர்கள் உலகத்தில் வெகு சிலரே. அதனால் இந்தக் குற்றம் உலகத்தில் அச்சமுண்டாக்கத்தக்கதாக இருக்கிறது. அப்படி) அச்சந்தரக்கூடியதாக உள்ள இந்த உலகத்தில் மெச்சத் தகுந்தவர்கள் யாரென்றால், இன்னொருவனுடைய மனைவியைக் காம ஆசையினால் தீண்டாதவர்களே.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அச்சம் தருவதாகிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளையும் அடைவதற்கு உரியவர்கள் யாரென்றால், பிறனுக்கு உரியவளது தோள்களை அணையாதவர்கள் என்பதாம்.
தமிழ்க்குழவி உரை:
இவ்வுலகில் கனவிலும் கூட பிறன் மனைவியின் தோளைத் தழுவிச் சுகம் பெற நினையாதாரே வாழ்வில் எல்லா நலன்களுக்கும் உரியவராவார்.
Translation
Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide? The men who touch not her that is another's bride.
Explanation
Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.
Transliteration
Nalakkuriyaar Yaarenin Naamaneer Vaippin Pirarkkuriyaal Tholdhoyaa Thaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 149