Thirukural

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன்.

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன். இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறவியல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுவன்; பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமைபூண்டு அவன் வழி நிற்பவளின் பெண்டன்மையை விரும்பாதவனாவான். ஆனுருபு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. பிறன் மனையை விழையாதவனே உண்மையான இல்லறத்தான் என்றவாறு.
கலைஞர் உரை:
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(உலகத்தில் இல்லறம் ஒழுங்காக நடைபெறுதற்குப் பிறனில் விழையாமைதான் பிரதானம். ஆதலால்) இல்லற முறைப்படி குடும்ப வாழ்க்கை நடத்துகிறவன் யாரென்றால், இன்னொருவனுடைய இல்லறத்துக்காக வாழ்க்கைப்பட்டிருக்கிற பெண்ணின் காம இன்பத்தை விரும்பாதவனே.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அறமாகிய தன்மையுடன் இல்லறத்தில் வாழபவன் என்று சொல்லப்படுபவன் பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பில் இருப்பவளது பெண்தன்மையினை விரும்பாதவனே ஆவான்.
தமிழ்க்குழவி உரை:
அறவழி நின்று தன் துணையோடு இல்லற வாழ்வில் இசைந்து வாழ்பவன் எந்தச் சூழலிலும் பிறன் மனைவியை விரும்பாத ஒழுக்க சீலனாய் இருப்பான்.
Translation
Who sees the wife, another's own, with no desiring eye In sure domestic bliss he dwelleth ever virtuously.
Explanation
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.
Transliteration
Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal Penmai Nayavaa Thavan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 147