Thirukural

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.
தேவநேயப் பாவாணர் உரை:
இல் இறப்பான் கண் - பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்து; பகை , பாவம் , அச்சம் , பழி என நான்கும் இகவாவாம் - பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம். அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் பிறன்றாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்றாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென் றச்சத்தோ டிந்நாற் பொருள். (82) புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சந் தோன்றாமற் காப்பச்சம் எக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ வுட்கான் பிறனில் புகல் (83) காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையும் ஆணின்மை செய்யுங்கா லச்சமாம் -நீணிரயத் துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட இன்ப மெனக்கெனைத்தாற் கூறு. (84) இவை நாலடியார்.
கலைஞர் உரை:
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பிறன் மனைவியின்மேல் காமங்கொள்வதால்) இன்னொரு வனுடைய மனைவியிடத்தில் காமத் தொடர்பு நாடுகின்றவனுக்கு அதனாலுண்டாகும் பகைமையின் வஞ்சினமும், குற்றத்தின் பாவமும், கண்டுகொண்டால் என்னவாகுமோ என்ற அச்சமும், பிறர் பேசும் பழிச்சொல்லும் ஆகிய நான்கும் எப்போதும் இருந்து கொண்டே யிருக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பகை, பாவம், அச்சம், பழி ஆகிய இந்த நான்கு குற்றங்களும் பிறன் மனைவியினிடத்தே நெறிகடந்து செல்லுபவனைவிட்டு ஒருகாலும் நீங்காவாம்.
தமிழ்க்குழவி உரை:
பிறன் மனைவியை விரும்பி அவ்வில்லம் செல்பவன்பால் பகை, பாவம், அச்சம், பழி என நான்கும் அகலாமல் நிற்கும்.
Translation
Who home ivades, from him pass nevermore, Hatred and sin, fear, foul disgrace; these four.
Explanation
Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.
Transliteration
Pakaipaavam Achcham Pazhiyena Naankum Ikavaavaam Illirappaan Kan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 146