|
தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து.
இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தவறு இலராயினும் தாம் வீழ்வார் மெல்தோள் அகறலின் - ஆடவர் தம்மிடத்துத் தவறல்லாதவராயினும் உடையார்போல வூடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களினின்று சிறிது போழ்து நீங்கியிருத்தலால்; ஆங்கு ஒன்று உடைத்து அவ்வூடல் அவர்க்கு அத்தகையதோரின்பம் பயத்தலுடையது.
ஆடவர்பால் தவறிருப்பினும் இல்லாவிடினும் ஊடலெல்லாம் உணர்த்தப்பட்டுப் பேரின்பம் கூடலில் முடிவதால், அதனால் எவ்கையிலுங் கேடில்லையென்பான் 'தவறிலராயினும்' என்றும் , அதனாலுண்டாகும் இன்பம் சொல்லொணாது அளவிறத்தலின் 'ஆங்கொன்று' என்றும் , கூறினான். தவறின்றி யூடியதும் எனக்கின்பமாயிற் றென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(புணர்ச்சி முடிந்ததும் காதலியின்மீது மயங்கிப் படுத்திருந்த காதலன் அவளை விட்டுப் பிரிந்து தனியே படுக்கிறான். தனக்குள்ளே சொல்கிறான்:) காதலி விரும்பாவிட்டாலும் புணர்ச்சி முடிந்தபின் தான் விரும்புகின்ற அவளுடைய மிருதுவான தோள்களைத் தழுவிக் கொண்டிருப்பதை விட்டுத் தானாகவே காதலன் விலகி விடுவதில் ஒரு நன்மை உண்டு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஆடவரிடத்தில் தவறு இல்லையென்றாலும் இருப்பதுபோல ஊடுதல் செய்கின்ற (தாம் விரும்பிய), மகளிரது மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது காதலர்க்கு அப்படிப் பட்டதோர் இன்பம் தரும் தன்மையுடையதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தவறேதும் இல்லாதவர் ஆயினும், தாம் விரும்பு பவருடைய மென்தோள்களைத் தழுவாமல் கொஞ்சம் அகலுவதிலும் ஒரு தனி இன்பம் உண்டு.
|
|
Translation
|
|
Though free from fault, from loved one's tender arms
To be estranged a while hath its own special charms.
|
|
Explanation
|
|
Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
|
|
Transliteration
|
|
Thavarilar Aayinum Thaamveezhvaar Mendrol
Akaralin Aangon Rutaiththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|