|
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக. (அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்: அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக.
இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.)
புல்லாது இராப்புலத்தை - தலைவியே! நீ விரைந்து சென்று காதலரைத் தழுவாது இக்கரணியத்தை மேலிட்டுக் கொண்டு புலப்பாயாக;அவர் உறும் அல்லல் நோய் சிறிதுகாலம்- அங்ஙனம் புலந்தால் அவர் அடையும்துனபநோயைச் சற்றுக் கண்டு களிப்போம்.
உன் ஆற்றாமை கண்டும் பிரிந்துபோய் நமக்குப் பெருந்துன்பத்தை விளைத்ததினால், நாமும் அவர்க்குச் சிறிது துன்பம் விளைத்து அவர் படும்பாட்டைக் காண்போம் என நகையாடி வாயில் நேர்வித்தவாறு. 'அல்லல்நோய்' துன்பத்தைச் செய்யுங் காமநோய். புலவி நீளின் சுவையிழக்குமாதலால் 'சிறிது' என்றாள். 'புலத்தை' -'ஐ' ஏவலொருமை யீறு, 'புலத்தி' என்பதும் பாடம். 'இராஅ' அசைநிறையளபெடை.
|
|
கலைஞர் உரை:
|
|
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது
நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(காதலனிடம் பிணங்கிக்கொண்டவள் போல் காதலி படுத்திருக்க, காதலன் அவளை நாடி வருகிறான். காதலியைத் தழுவுகிறான். அப்போது அவள் தன்னுள் சொல்கிறாள்;) மனமே! இவரைத் தழுவாமல் பிணங்கியபடியே இருப்பாயாக. (நம்மை இவ்வளவு பாடுபடுத்திய) இவர் காம வேதனையால் படும்பாட்டைச் சிறிது வேடிக்கை பார்க்கலாம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
புலந்து கொண்டிருந்தால் காதலர் அடையும் வேதனையைச் சிறிது காண முடியும். ஆதலால் நீ விரைந்து சென்று அவரைத் தழுவாமல் புலந்து (பிணங்கிக்) கொண்டிருப்பாயாக.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காதலரைத் தழுவாது சிறிது ஊடல் கொண்டு அதனால் அவர் உறும் துயரத்தைக் கொஞ்சம் காண்போமா!.
|
|
Translation
|
|
Be still reserved, decline his profferred love;
A little while his sore distress we 'll prove
|
|
Explanation
|
|
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not
|
|
Transliteration
|
|
Pullaa Thiraaap Pulaththai Avar Urum
Allalnoi Kaankam Siridhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|