|
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின்.
இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
காமம் பனைத் துணையும் நிறைய வரின் -மகளிர்க்குக் காமம் பனையளவாகவும் நிரம்ப வுண்டாகு மாயின் ; தினைத் துணையும் ஊடாமை வேண்டும் -அவர் தம் காதலரொடு தினையளவும் ஊடுதலை மேற் கொள்ளா திருத்தல் வேண்டும் .
ஊடின் புணர்ச்சி தடைப் பட்டுக் காம நோய் அள விறந்த துன் பந்தரு மென்று , பிறர்க்கு நல்லது சொல்வாள் போன்று தன் விதுப்புக் கூறியவாறு . தினை பனை யென்னும் அளவுப் பெயர்கள் முறையே சிற்றளவும் பேரளவும் உணர்த்தி நின்றன . உம்மையிரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு ; பின்னது உயர்வு சிறப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும்
கொள்ளாமல் இருக்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
நெடுநாள் பிரிவினால் பனைபோல் வளர்ந்துவிட்ட காமமெல்லாம் இப்போது சேர்ந்து வருவதால் தினையளவேனும் தாமதிக்காமல் புணரவேண்டுமென்ற ஆசையுண்டாகிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மகளிர்க்குக் காமம் பனையளவினைவிட மிகுதியாக உண்டாகிவிடுமானால் அவரால் தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படுவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காதல் உணர்வுகள் பனையளவு பெருகி நிற்கின்ற பொழுது, காதலரோடு தினையளவு கூட ஊடாமை வேண்டும்.
|
|
Translation
|
|
When as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain.
|
|
Explanation
|
|
If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.
|
|
Transliteration
|
|
Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith Thunaiyum
Kaamam Niraiya Varin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|