|
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு.(களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு.
கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(பிரிதற் குறிப்பினனாகிய தலைமகனோடு நீ புலவாமைக்குக் காரணம் யாதென நகையாடிய தோழிக்குச் சொல்லியது .)
உள்ளக் களித்தலும்-நினைத்தவளவிலேயே உள்ளங் கிளர்தலும் ; காண மகிழ்தலும்-கண்ட வளவிலேயே இன்புறுதலும் ; காமத்திற்கு உண்டு கள்ளுக்கு இல்-காம நுகர்ச்சிக்குரிய காதலன்(அல்லது காதலி)பற்றி யுண்டாகும், கடிப்பிற்குரிய கள் பற்றி யுண்டாகா.
ஆதலாற் காதலன் முன்பு புலப்ப தெங்ஙனம் என்பதாம் . களித்தல் கள்ளுண்டு மகிழ்ச்சியடைதல் ; மகிழ்தல் கள்ளுண்டு வெறித்து இன்புறுதல் . இவ்விரண்டும் உண்டாலன்றி யின்மையின் ' கள்ளுக்கில்' என்றாள் . ' உண்டு' என்பது முன்னுஞ் சென்றியைதலால் இறுதிவிளக்கு . இதை ஒர் அணியாகக் கொள்வர்.
|
|
கலைஞர் உரை:
|
|
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால், காதல் அப்படியல்ல;
நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(காதலி தன் தோழியிடம் சொல்லிக்கொள்கிறாள்:) நினைக்கும்போதே வெறி மூட்டும் குணமும் கண்டவுடனே மகிழ்ச்சியுண்டாக்கும் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்துக்கே உண்டு. (கள்ளைக் கண்டால் அருவருப்பே உண்டாகும்; காதலரைக் கண்டால் மகிழ்ச்சி வருகிறது).
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நினைத்த பொழுதே களிப்படைதலும் கண்டவுடனே மகிழ்ச்சியுறுதலும் கள்ளுண்பார்க்கு இல்லை; காமம் உடையார்க்கு உண்டு.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நினைத்த பொழுதில் களித்தலும், கண்ட பொழுதில் மகிழ்தலும் ஆகிய தன்மைகள் கள்ளுக்கில்லை. காதலுக்கு உண்டு.
|
|
Translation
|
|
Gladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight.
|
|
Explanation
|
|
To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
|
|
Transliteration
|
|
Ullak Kaliththalum Kaana Makizhdhalum
Kallukkil Kaamaththir Kuntu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|